புதன், 25 மார்ச், 2026

நீக்கமற நிறைந்த முருகன்

24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி 7.00 நான் முருகனிடம் வேண்டிக்கொண்டே செல்கிறேன் முருகா முதன்முதலாக உன்னை பார்க்க வருகிறோம். எங்களுக்காக நடை திறந்திருக்கட்டும்னு. 

ஆட்டோ டிரைவர் எல்லாம் எனக்கு தெரியும்னு சொல்லி எப்பவும்போல சொதப்பி வேறபக்கம் போயிட்டார். அப்பறம் அங்கே விசாரிச்சு கோயிலுக்கு வந்தால் மணி 7.50 அவ்வளவு தான் கோயில் நடை சாத்திட்டாங்க. உள்ள போனால் அங்கே ஒரு பெரியவர் இருந்தார். அவர் கிட்ட கேட்கிறோம் நடை சாத்திட்டீங்களான்னு 2,3 முறை. அவர் என்ன நினைச்சாருன்னு தெரியவில்லை. வாங்க வந்து கும்பிடுங்கன்னு சொல்லி கதவைத் திறந்து உள்ள வாங்கன்னு சொன்னார். எனக்கென்னவோ அது முருகனே வாங்க ன்னு கூப்பிட்ட மாதிரி இருந்தது. சந்தோஷத்தில் எனக்கு ஒன்னுமே ஓடல.

பட்டர் இல்லாததால வாங்கிட்டு போன பூவை அங்கு வைக்க சொன்னார். காலையில் வந்து போட்டிருவாங்கன்னு சொன்னார். திருச்செந்தூர் போகும் போதெல்லாம் (எனக்கு கண் மைனஸ் பவர்) முருகன் தெளிவாக பார்க்க முடியாது. எந்த கோயில் போனாலும் இதே நிலை தான். அதனால் எந்த கோயில் போனாலும் கண்குளிர உன்னை தரிசனம் செய்ய வேண்டும் என்று மட்டும் தான் கேட்பேன். அதுமாதிரி ஓரளவு எவ்வளவு கூட்டம் கூட்டமாக இருந்தாலும் நின்னு தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும் அவனருளால். அப்படி எல்லாம் ஏங்கித் தவித்ததால் தான் நேற்று அந்த ஏக்கம் தீர்ந்தது.

கொஞ்ச நேரத்தில பட்டரும் அங்கே வந்தார். முருக பக்தர் ஒருவர் பெயரைச் சொல்லி வீடியோ பார்த்துட்டு வர்றீங்களா? ன்னு கேட்டார். ஆமாம் என்றோம். மனதுக்கு நிறைவாக ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் கொஞ்சம் கவலையாக இருந்தது. முருகா நீ எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறாய். ஆனால் ஓரிடத்தில் உனக்கு அலங்காரம் அபிசேகம் என்று எப்போதும் விழாக்கோலம் கொண்டு இருக்கிறாய். ஆனால் ஒரு சில இடங்களில் ஏன் இப்படி தனியானாக நிற்கிறாய்? என்று முருகனிடம் முறையிட்டேன். கனத்த மனதுடன் மிகவும் அமைதியாக வீடு வந்து சேர்ந்தோம்.

நன்றி முருகா 🙏

ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

அப்பாவுக்கு நன்றி

 

நான் அப்பா பிள்ளை என்று தான் எப்போதும் சொல்லிக்கொள்வேன். அவர் மிகவும் கோபக்காரர் தான். ஆனாலும் ஏனோ தெரியவில்லை அவரைத்தான் எனக்கு பிடிக்கும். 

அவர் எத்தனையோ விதங்களில் எனக்கு நல்ல நல்ல விசயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். என்னை இந்த சமூகத்தில் நல்ல பெண்ணாக வளர்த்திருக்கிறார். தைரியமான பெண்ணாக துணிச்சல் மிக்க பெண்ணாக வளர்த்திருக்கிறார்.  அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் மூலம் எனக்கு தன்னுடைய கஷ்ட நஷ்டங்களைப் புரியவைத்திருக்கிறார். 

உதாரணமாக "காசோட அருமை தெரியுமா உனக்கு?" என்று அடிக்கடி கேட்பார். உண்மையில் சிறுவயதில் எனக்கு கோபம் வரும். ஆனால் எப்போது நான் சம்பாதிக்க ஆரம்பித்தேனோ, அப்போது தான் அவரின் கேள்வியில் உள்ள நிதர்சனத்தை அதன் கனத்தை உணர்ந்தேன். அதுமட்டுமல்ல அவர் மாடாய் உழைத்த உழைப்பின் உன்னதத்தையும் நான் பல நேரங்களில் உணர்ந்துள்ளேன். 

நான் பார்த்த என் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளின் அப்பாக்கள் போல் அல்ல என் அப்பா. அவர் முகத்துக்கு பவுடர்பூசிப் பார்த்ததில்லை. உடம்பில் வாசனை திரவியம் பூசியதில்லை. கண்ணாடி முன் நின்றுகொண்டு மணிக்கணக்கில் தலைவாரியதில்லை. போகும்போதும் வரும்போதெல்லாம் கண்ணாடியில் தன்னைத் தானே கண்டு ரசித்ததும் இல்லை. [இதை எல்லாம் செய்யும் அளவுக்கு அவர் அழகாயில்லையோ என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.] 
ஆனால் அவர் எங்களை அழகுபடுத்தி பார்த்தார். ஆனால் ஒன்று கண்ணுக்கு மைதீட்டுவது மட்டும் அவருக்கு பிடிக்காது. நாங்களும் கண்ணுக்கு மைதீட்டியதில்லை இன்றுவரை. 

அவர் யாரையும் குறை கூறியதில்லை. எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என்று தான் நினைக்கச் சொல்லுவார். இறைவனைக் கோவிலுக்குச் சென்று வழிபடத் தேவையில்லை. உன் மனதார நினை அதுபோதும் என்பார். கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைப்பது கூட அவருக்கு பிடிக்காது. காரணம் கடன் வாங்குவதும் தவறு கொடுப்பதும் தவறு என்பது அவருடைய வேதம். இருப்பதை வைத்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவார். 

இப்படி மிகவும் கண்டிப்புடன் தான் எங்களை வளர்த்தார். அன்று அவர் கண்டிப்புடன் வளர்த்ததால் தான் இன்று நான் என் பிள்ளையை நன்முறையில் வளர்க்க முடிந்தது. அதற்காக அவருக்கு என் உயிர் உள்ளமட்டும் நன்றி கூறுவேன். 

என் அப்பாவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி... 





சனி, 27 செப்டம்பர், 2025

நீருக்கு நன்றி

27.09.2025 சனிக்கிழமை 



இன்று என் வாழ்க்கையில் முதன்முறையாக நன்றி எனும் உணர்வை உணரவும் வெளிப்படுத்தவும் துவங்கியுள்ளேன். இதற்கு காரணமானவர்களுக்கு முதலில் என் நன்றி🙏💕


நான் நீருக்கு நன்றி என்ற அழகான பதத்தை குரு மித்ரேஷிவா அவர்களின் வகுப்பில் தான் முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். அவருக்கு இத்தருணத்தில் எனது நன்றி. 


மூன்று பக்கமும் கடலெனும் நீரால் சூழப்பட்ட துதான் உலகம். இவ்வுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் உணவே நீர் தான். அதுமட்டுமல்ல எல்லா உயிரினமும் நீரை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு தான் தத்தம் ஜனனம் எடுக்கின்றது. அதனால் தான் "நீரின்றி அமையாது உலகு" என்று வள்ளுவன் வகுத்துரைத்தான். 


தாயின் கருவறையில் உருவாக, கருக்கொண்ட நாள் முதல் இன்று வரை என்னை வாழ்வித்த நீருக்கு நன்றி. அதுமட்டுமல்ல என் வாழ்நாள் முழுவதும்.... என்னுடைய இறுதி நாளிலும்கூட நீரின்தேவை அவசியம் தேவையாகிறது என்பதையும் மனப்பூர்வமாக உணருகிறேன். அத்தகைய நீருக்கு நன்றி. 


நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕நன்றி🙏💕


நன்றி

🙏


புதன், 26 ஜூன், 2024

என்னை பாதித்த வரிகள்

இரண்டொரு நாள் முன்னதாக என் தோழி தன் புலனத்தில் அதாவது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்த கீழ்க்கண்ட வரிகள் என்னை மிகவும் பாதித்தன. 


இந்த வரிகள் தந்த வலியால் எனக்குள் உதித்த வரிகள் இதோ👇

சுகத்திற்காக இருளைத்தேடும் 

மிருகத்திடம் — வெளிச்சத்தைத்

தேடி இருளையே விழுங்கும் மனுஷி

அவளுக்குப் பெயர் என்னவோ வேசி! 


சிலநிமிட உணர்ச்சிக்கு (உரசலுக்கு) 

ஊன் தேடும் மிருகத்திடம் — கட்டிய

கணவனின் பிணி தீர்க்க, பெற்ற

பிள்ளையின் பசி போக்க ஒவ்வொரு

நொடியும் அம்புப்படுக்கையில் புரளும்

பிதாமகளுக்குப் பெயர் என்னவோ வேசி! 


மனத்தால் காமக்கசடுகளைச் சுமக்கும்

மிருகங்களுக்கு மத்தியில் உடலால்

துரியோதன துச்சாதனன்களையும் 

சேர்த்துச் சுமக்கும் திரௌபதிகளுக்குப் 

பெயர் என்னவோ வேசி! 


அண்ணல் நோக்கிய பிறகுதான்

அவளே நோக்கினாள் என்பதையும்

மறந்து அக்னிக்கு இரையாகச் சொன்ன

இராமன்களுக்கு  மத்தியில் வேகும்

சீதைகளுக்குப் பெயர் என்னவோ வேசி!!! 

வெள்ளி, 17 நவம்பர், 2023

பவளமல்லியா? பாரிஜாதமா?

என் வீட்டுத் தோட்டத்தில் பாரிஜாதம் பூத்திருந்தது. நான் அன்று தான் முதன்முதலாக நேரில் பார்க்கிறேன். காலை வேளையில் மழைமேகம் சூழ்ந்த வானமும் அதில் ஐப்பசி மாத மூடுபனியும் ஒருங்கே பெற்ற இரம்யமான நேரம். நான் செடியின் அருகே செல்லச்செல்ல அதன் சுகந்தம் அதாவது நறுமணம் என்னை அப்படியே அதன்வசம் இழுத்தது. அப்போது தான் புரிந்தது இம்மலர் ஏன் தேவலோகம் சஞ்சரிக்கும் மலராக இருந்தது என்று. என்னவொரு வாசனை தெரியுமா? அப்பப்பா அதைச் சொன்னால் புரியாது. அனுபவித்தால் மட்டுமே சுகிக்க முடியும். 

பேரதிர்ச்சி

அப்போது தான் தற்செயலாக எனக்கு தோன்றியது இணையத்தில் இம்மலரைப் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என்று தேடத் தொடங்கினேன். ஒரே அதிர்ச்சி.... பாரிஜாதம் என்ற மலரை பலபேர் பவளமல்லி என்று தவறாகத் தகவல்களைப் பதிவேற்றம் செய்திருப்பது கண்டு மனம் வருந்தினேன். இணையம் என்பது மிகப் பெரிய ஊடகம். இவ்ஊடகம் எதிர்காலத் தலைமுறையினருக்கு உரிய ஒப்பற்ற சாட்சியங்கள் நிறைந்த பெட்டகம். வரலாற்று உண்மைகளை எடுத்துக் காட்டும் கண்ணாடி. ஆதாரங்களையும் ஆவணங்களையும் சுட்டிக் காட்டும் கருத்துக்கூடம். 

ஆனால் தவறான பதிவேற்றங்களால் எதிர்காலத்தில் இணையம் என்பது பொய்மையும் போலியான கருத்துக்களும் நிரம்பிய குப்பையாகக் கருதும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டு மனிதனாலேயே அழிக்கப்பட்ட ஒன்றாகவும் மாற அநேக வாய்ப்புகள் உள்ளன. ஆம் சற்றேறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் இணையம் என்றால் என்னவென்று யாருக்குமே தெரியாது. ஆனால் இன்று பிறந்த குழந்தைக்குக்கூட மிகவும் பரிச்சயமானதாக இந்த இணையம் உள்ளது இல்லையா. இன்னும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு நாம் உந்தப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை அல்லவா. சரி விசயத்திற்கு வருகிறேன். 

பாரிஜாதம்

பாரிஜாதம் என்பது 12 இதழ்களும் வெள்ளை நிறமும் கையளவுகொண்ட அழகான மலர். இதன் இதழ்கள் ஒவ்வொன்றும் எருக்கு இலைபோல தடிமனாக இருக்கும். கீழே ஆறு இதழ்களும் அதற்கு மேலே ஆறு இதழ்களும் கொண்டு நடுவில் கம்பி போன்ற மகரந்தச் செதில்களும் கொண்டு விளங்கும் நறுமணம் மிகுந்த மலர். ஒரே ஒரு மலரே செடியைச் சுற்றிலும் ஒரு மீட்டர் தூரம் வரை நறுமணத்தைப் பரப்பும் தன்மை கொண்டது. அப்படி என்றால் கொத்துக் கொத்தாகப் பூத்தால் அந்த தோட்டம் முழுவதும் நறுமணம் கமழும். இது தான் என் வீட்டில் பூத்த பாரிஜாதமலர். 


கையளவு கொண்ட மலர் என்று கூறினேன் அல்லவா. எவ்வளவு பெரிதாக உள்ளது பாருங்கள். இதனால் தான் இம்மலர் தேவலோகத்தில் வாசம்செய்யும் பேறு பெற்றது போலும். இம்மலருக்கு ஒரு புராணக்கதை ஒன்று கூறப்படுகிறது. அதைப் பற்றி பார்ப்போம் வாருங்கள். 


ஒரு சமயம் தேவலோகம் சென்றிருந்த நாரதருக்கு தேவேந்திரன் ஒரு பாரிஜாத மலரைக் கொடுக்க, அதை அவர் எடுத்து வந்து கிருஷ்ணனிடம் தர, அதனைக் கிருஷ்ணன் தன் கையாலேயே ருக்மிணிக்குத் தலையில் சூட்டினார். 



அடுத்து சத்தியபாமையின் இல்லம் சேர்ந்த நாரதர் பாமாவிடம் நடந்தவற்றைக் கூறி அவள் மனதில் அசூயையை உண்டாக்கினார். சற்று நேரம் கழித்து பாமாவின் இல்லம் வந்த கிருஷ்ணனை பாமா தக்கமுறையில் வரவேற்காமல் அழுதவண்ணம் கோபமாகப் படுத்திருந்தாள். அவளைச் சமாதானப்படுத்தி எழுப்பி காரணத்தை அறிந்துகொண்டு பாமாவின் இல்லத்திற்கு பாரிஜாத மரத்தையை கொண்டு வந்து தருவதாக வாக்களித்தார். நரகாசூரன் வதத்திற்குப் பின் இந்திரனுக்கு உதவிய கிருஷ்ணன் இந்திரனிடம் பாரிஜாத மரத்தைக் கேட்டுப் பெற்றுவர நாரதரை அனுப்ப, அவன் மறுத்திட இந்திரனுக்கும் கிருஷ்ணனுக்கும் மரத்துக்காக போர் நிகழ்ந்தது. காசிப முனிவர் அறிவுரைப்படி பாரிஜாத மரத்தைத் துவாரகைக்கு அனுப்பி வைத்தான் இந்திரன்.



மரம் பாமாவிற்குக் கிடைத்தது பற்றி மனமகிழ்ந்த அவள் மலர்கள் அருகே உள்ள ருக்மிணி வீட்டில் குவிவது பற்றி திரும்பவும் கோபம் கொண்டாள். ருக்மணி மீது பொறாமையும் ஏற்பட்டது. மறுநாள் கிருஷ்ணன் பாமாவுடன் ருக்மிணியின் வீட்டிற்குச் சென்றார். ருக்மிணி அகமகிழ்ந்து வரவேற்றாள். ருக்மணி உள்ளே சென்று தொடுத்து வைத்திருந்த பாரிஜாத மலர் மாலையை எடுத்து வந்து கிருஷ்ணனுக்குச் சூட்டி மகிழ்ந்தாள். அப்போது கிருஷ்ணன் ருக்மிணியிடம் எல்லா மலர்களையும் எனக்கே சூட்டிவிட்டாயே? உனக்கு எங்கே? என்று கேட்டார். அதற்கு ருக்மிணி என்னையே பகவானுக்கு அர்ப்பணித்தவிட்ட பிறகு எனக்கென்று வேறு எதற்கு? பகவான் மகிழ்ச்சியே எனக்கு நிறைவைத் தருகிறது என்றாள். இதைக் கேட்டு சத்தியபாமா வெட்கித் தலை குனிந்தாள். பாமா மலரைத் தானே சூடி மகிழ நினைத்தாள். மலர் கிடைப்பது அரிதாயிற்று. அதனை பகவானுக்கே அர்ப்பித்தாள் ருக்மிணி. எனவே தான் முயற்சி இல்லாமலேயே மலர் ருக்மிணிக்குக் கிடைத்தது. பாமா முயன்றும் அவளால் பெற முடியவில்லை. அப்போது சத்தியபாமா தன்னை மன்னித்து விடுமாறு வேண்டி கிருஷ்ணன் பாதங்களில் விழுந்து வணங்கினாள். பாமாவின் மனத்தில் இருந்த துவேஷம் நீங்கியது பற்றி மகிழ்ச்சியைத் தெரிவித்தார் கண்ணன். அன்று முதல் தன் வீட்டில் விழும் பாரிஜாத மலர்களைப் பறித்து ருக்மிணிக்குக் கொடுத்து வந்தாள். 

இதுதான் அந்த கதை. ஆகவே பாரிஜாதம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் பூமிக்கு வந்தது என்றும் அவருக்கு மிகவும் பிடித்த மலர் என்பதும் புராணங்களின் வழி நமது நம்பிக்கையாகவும் உள்ளது. 

அடுத்து பவளமல்லி பற்றி பார்ப்போம் வாருங்கள்.... 

பவளமல்லிகை

இதுவும் என் வீட்டில் மலர்ந்தது தான்


பவளம் என்பது நவரத்தினங்களுள் ஒன்று என்பது யாவரும் அறிந்ததே. இதன் நிறம் சிவப்பு. மல்லிகை போல் அதீத மணம் பரப்பும் வெள்ளை நிறம் கொண்ட மலராக இருந்தாலும் அதன் காம்பு பவளம் போல் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். காம்பு சிவப்பு நிறத்தில் இருப்பதால் பூவின் உட்புறநடுவிலும் சிவப்பு நிறமானது மிகவும் அழகாகத் தென்படும். எனவேதான் இம்மல்லிகை மலருக்கு பவளமல்லிகை என்று பெயர் ஏற்பட்டது. இம்மலர் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மலர்ந்து சூரியோதயம் வருவதற்கு முன்பே உதிர்ந்துவிடும். இம்மலர் அளவில் ஒரு அங்குல அளவே இருக்கும். அதாவது ஒரு இன்ச் அளவு மட்டுமே இருக்கும். பெரும்பாலும் ஆறு இதழ்களே இருக்கும். சிலசமயம் மட்டுமே எட்டு இதழ்கள் கொண்டு விளங்குகிறது. இதன் நறுமணமும் அவ்விடம் முழுவதும் நிரம்பி தெய்வீக ஆற்றலைப் பரப்பும் தன்மை கொண்டது. மேலும் இம்மலர்ச்செடி வாஸ்து தோசம் நீக்கும் தன்மை கொண்டது என்று நம்பப்படுகிறது. 

இதற்கும் ஒரு சுவாரஸ்யமான புராணக்கதை ஒன்று உள்ளது.... 



தேவலோக கன்னியர்கள் என ரம்பை ஊர்மிளை மேனகை திலோத்தமை இவர்களைக் கருதுவோம் இல்லையா.



இவர்களைப்போலவே பவளமல்லிகை என்ற தேவகன்னியும் இருந்தாளாம். அவள் சூரியன் மீது மிகுந்த காதல் கொண்டாளாம். ஒரு நாள் தன் காதலை சூரிய பகவானிடம் அவள் தெரிவித்தாளாம். ஆனால் சூரிய பகவானோ அவளின் காதலை ஏற்க மறுத்துவிட்டாராம். அதனால் ஆத்திரம் கொண்ட பவளமல்லிகை இனி என்றுமே உன்முகத்தில் விழிக்கவேமாட்டேன் என்று சபதம் ஏற்று பூலோகம் வந்து ஒரு செடியாக மாறினாளாம். அவளே இந்த பவளமல்லிகைப் பூச்செடியாம். அதனால் தான் இப்பவளமல்லிகை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தோன்றி சூரிய உதயத்திற்கு முன்பே உதிர்ந்துவிடுகிறதாம். இதோ இப்படி...... 



ஆகமொத்தத்தில் இந்திரலோகம் என்ற தேவலோக விருட்சங்களில் ஒன்று பாரிஜாதம். தேவலோக கன்னியர்களில் ஒருவள் பவளமல்லிகை. 
(பெயர்கூட ரம்பை ஊர்மிளை மேனகை திலோத்தமை போலவே பவளமல்லிகை என்று ஐகாரத்தில்தான் முடிகிறது என்று நாமும் ஒரு முடிவுக்கு வருவோம்.)

புராணக் கதைகள் எவ்வாறு இருப்பினும் பாரிஜாதம் வேறு. பவளமல்லிகை வேறு என்பது மட்டும் உறுதி. 

நன்றி🙏

 




வெள்ளி, 2 டிசம்பர், 2022

வாழ நினைத்தால் வாழலாம்


கவியரசு கண்ணதாசனின் அற்புதமான வரிகளின் வரிசையில் இவையும் ஒன்று. 

"பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும். பார்த்து நடந்தால் பயணம் தொடரும். பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும். கதவு திறந்தால் காட்சி கிடைக்கும். காட்சி கிடைத்தால் கவலை தீரும். கவலை தீர்ந்தால் வாழலாம்" 

இவ்வரிகள் மேலோட்டமாக பார்த்தால், ஒரு மனிதன் ஏன் வாழ வேண்டும் என்று பார்க்க தெரிந்து விட்டால் அவன் வாழ வேண்டியதற்கான பாதை தெரியும். அந்த பாதையில் பார்த்து கவனமாக நடந்தால் அதாவது வாழ்ந்தால் வாழ்க்கை பயணம் தொடரும். வாழ்க்கை பயணம் தொடர்ந்தால் நாம் அடைய வேண்டிய இலக்கின் கதவுகள் திறக்கும். கதவுகள் திறந்தால் வெற்றித்திருமகளின் காட்சி கிடைக்கும். அவளின் காட்சி கிடைத்த பிறகு கவலை இருக்குமா என்ன? தீரும் தானே.  

எவ்வளவு ஆழமான கருத்தை கண்ணதாசன் எவ்வளவு எளிமையாக சொல்லிச் சென்றுள்ளான். இல்லையா. 

இதே வரிகளை நாம் அறிவியல், உடலியல், மனோதத்துவவியல், ஆன்மவியல் என்ற அடிப்படையில் ஆன்மிகவியலாகக் கண்டால் பேருண்மை விளங்கும். 

அழியாத ஆன்மாவைச் சுமப்பதற்காகப் பிறந்ததே இவ்வுடல். எனவே பரிசுத்தமான ஆன்மாவைச் சுமக்கும் உடலும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் அல்லவா. அப்படி என்றால் இவ்வுடலின் இயக்கத்தை நாம் பார்க்கத் தெரிந்து கொள்வது அவசியம் தானே. 

இதனைத் தான் சித்தர்கள் தங்கள் பாடல்கள் முழுவதும் சொல்லிச் சென்றுள்ளனர். அதனை வழிவழியாக வந்த குருமார்கள் பண்டிதர்கள் யோகியர்கள் ஞானியர்களும் நமக்கு ஆங்காங்கே கற்றுக் கொடுத்துக்கொண்டு தான் உள்ளனர். 

இப்படி சித்தர்கள் சொன்ன இரகசியங்களை ஒரு குருவின் வழி நாம் கற்றுக் கொண்டு, நம் உடலின் இயக்கத்தை தெரிய முற்படுகிறோம் அதைத் தான் தியானம், யோகம், குண்டலினி யோகம், காயகல்பயோகம் என்றெல்லாம் பல வழிமுறைகளில் பயிற்சி செய்து பார்க்கிறோம். 

நம் உடலின் இயக்கத்தை தெரிந்து கொண்டால், இயக்கத்திற்கான ஆன்ம வழிப்பாதை தெரிந்துவிடும். அவைதான் நம் உடலில் சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, துரியம் போன்றவை ஆகும். இந்த சக்கரங்கள் வழிப்பாதையில் பார்த்து கவனமாக நடந்தால் இறைவனை அடைய வேண்டிய நிலைக்கான கதவுகள் திறக்கும். கதவுகள் திறந்து விட்டால் இறைவனின் காட்சி கிடைக்கும். இறைவனையே கண்ட பிறகு கவலை இருக்க வழியுண்டோ? இல்லை தானே!!!! 


இந்த நல்ல கருத்தைப் பதிவு செய்ய வாய்பளித்த இறைவனுக்கும் குருவிற்கும் நன்றி 🙏🙏


புதன், 27 ஏப்ரல், 2022

தென்னகத்தின் எல்லோரா

 ஆசியர் பணியே அறப்பணி. அதற்கே உன்னை அர்ப்பணி! என்ற  வாக்கு எவ்வளவு மகத்துவமானது என்பதை நான் சில தினங்களுக்கு முன்பு தான் உணர்ந்தேன். காரணம் மாணவர்களுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தினம் தினம் கற்கத் துவங்குகிறோம். அதுபோலவே அவர்களுக்கு ஒரு விடயத்தை எடுத்துச் சொல்வதற்காகவும் அல்லது அவர்களுக்கு அதை நேரில் காண்பிப்பதற்காக நாமும் உடன் செல்கின்றோம். இதனால் அவர்களும் அறிந்து கொள்கிறார்கள். நாமும் தெரிந்து கொள்கின்றோம். அந்த வகையிலே சில தினங்களுக்கு முன்பு மாணவிகளை அழைத்துக்கொண்டு கழுகுமலை சென்றோம். 

கழுகுமலை


 எங்கள் கல்லூரியில் இருந்து கழுகுமலை சரியாக 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இம்மலைக் கோவிலில் முருகன் வழிபடு கடவுளாக விளங்குகின்றான். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னனின் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. இக்கோவிலின் கிழக்குப் பக்கமாக 100 மீட்டர் தொலைவில் வெட்டுவான் கோவிலும் அதிலிருந்து சற்று மேலே மலை உச்சியில் சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக சமணப்படுகையும் குகையும் உள்ளது.

தல வரலாறு 

 இக்கோவிலில் இராமாயண காலத்து கதை ஒன்று பேசப்படுகின்றது.  கழுகின் அரசனான ஜடாயுவின் சகோதரனான சம்பாதி இத்தலத்திற்கு வந்து தவம் புரிந்து முருகனின் அருளைப் பெற்று முக்தி அடைந்ததாக கூறப்படுகின்றது. 

 இராமன் வனவாசம் சென்ற பொழுது சீதை இராவணனால் கவர்ந்து செல்லப்பட்டாள். அப்போது ஜடாயு இராவணனைத் தடுக்க முயன்றார். ஆனால் இராவணன் தன் வாளால் ஜடாயுவின் இறக்கைகளை வெட்டிக் கீழே தள்ளிவிட குற்றுயிரும் குலையுயிருமாக தவித்தார். அப்போது அவ்வழியே சீதையைத் தேடி வந்த இராமன் ஜடாயுவைக் கண்டார். ஜடாயு நடந்ததை எல்லாம் இராமனிடம் சொல்லிய பிறகே தன் உயிரை விட்டார். எனவே இராமன் ஒரு தகப்பனுக்குச் செய்ய வேண்டிய இறுதிக்காலக் கடமையாக எண்ணி ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார். 

 இதனை சில காலங்களுக்குப் பிறகு அனுமனால் சம்பாதி அறிந்து கொள்ள, மிகவும் வருத்தப்படுகிறான். காரணம் தன்னுடைய சகோதரனுக்கு ஈமக்கிரியை செய்யாமல் விட்டதை எண்ணி தனக்கு தோஷம் பீடித்துக்கொண்டது என்று கலங்குகின்றான்‌. இராமனிடம் இது குறித்து கேட்டு இதற்கு ஏதாவது விமோசனம் இருக்கிறதா என்று வினவுகின்றான். இராமனும் கஜமுக பர்வதம் என்று தென்னகத்தில் ஒரு மலை உள்ளது. அங்கு முருகன் வீற்றிருக்கின்றான். அங்கு சென்று தவமியற்றி முருகனுடைய அருளைப் பெற்று ஆம்பல் நதியில் நீராட உன்னுடைய பாவம் போகும் என்று கூறுகின்றார். 

 அதன்படியே சம்பாதி என்று சொல்லக்கூடிய கழுகின் அரசன் இங்கே வந்து தவம் இயற்றி தன்னுடைய பாவத்தைப் போக்கிக் கொண்டு முத்தியும் பெற்றதாக வரலாறு கூறுகின்றது. அதனாலேயே அரைமலை என்னும் பழைய பெயர் கொண்ட இம்மலைக்கு கழுகுமலை என்ற பெயர் உண்டாயிற்று. 

கோவிலின் சிறப்புக்கள் 


 இத்தலம் குரு மங்கள சேத்திரம் என்று போற்றப்படுகிறது. காரணம் குருவாக உமாமகேஸ்வரரும், மங்களத்தின் அதிபதியாக முருகனும் விளங்குவதால் குருமங்கள சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

 இங்கு முருகன் மேற்கு நோக்கி அமர்ந்த நிலையில் வீற்றிருப்பதால் ராஜபோக தளம் என்று கச்சியப்பர் பாடியுள்ளார்.

 வள்ளியும் தெய்வானையும் முருகனை நோக்கி வணங்கியபடி தென்,வடலாக நின்று அருள்பாலிப்பதும் தனிச்சிறப்பு.

 முருகன் இங்கு ஒரு முகத்துடனும் ஆறு கரத்துடனும் காட்சி தருகிறார்.

 மேலும் இக்கோயில் குடைவரைக் கோயில் என்றாலும்கூட முருகனின் சந்நிதி வலம் வரும் விதமாக மிகவும் நேர்த்தியாக குடையப்பட்ட அற்புதமான கோயில் என்று கூறலாம்.

 மேலும் மயில் இங்கு முருகனின் இடப்பக்கத்தில் இருப்பது மற்றொரு சிறப்பு. காரணம் இங்கே மயிலாக இருப்பது இந்திரன் ஆவான். ஆகவே இத்தலம் சூரசம்ஹாரத்திற்கு முன்பு தோன்றிய தலமாகும்.

 ஒரே மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில் என்பது தனிச் சிறப்பு.

 இக்கோவிலுக்கு மலையே விமானமாக இருப்பதால் கோபுரம் தனியே கிடையாது.

 இக்கோவிலின் தெப்பத்தின் நீர் காண்பதற்கு பால்போல் தோன்றும். அதற்கு காரணமாக ஒரு கதையும் சொல்லப்படுகிறது. 

 அதாவது பார்வதிதேவி முருகனுக்கு சங்கினால் பாலைப் புகட்டிவிட்டு அச்சங்கினைக் கழுவியதால் இவ்வாறு  பால் போன்ற நிறத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. 

 மேலும் சங்கரன்கோவிலில் உள்ள தெப்பம் பச்சை நிறமாக இருக்கும். அதற்கு காரணம் பார்வதிதேவி பச்சிலை மருந்தினை முருகனுக்கு கொடுத்துவிட்டு அந்த சங்கினைக் கழுவியதால் அங்ஙனம் பச்சையாக தோன்றுகின்றது என்று செவிவழிக் கதையாகக் கூறப்படுகிறது.

வேறு பெயர்கள்

 கஜமுக பர்வதம் என்றும் அரைமலை என்றும் அழைக்கப்பட்டது.

வெட்டுவான் கோவில்


 கழுகுமலை முருகன் கோவிலின் கிழக்கே சற்றேறக்குறைய 100 மீட்டர் தொலைவில் உள்ளது வெட்டுவான் கோவில். தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் மிகவும் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 இக்கோயில் மலையின் மேற்பகுதியில் இருந்து 25 அடி கீழ்நோக்கியும் 40 அடி சுற்றளவுடனும் ஒரே பாறையை வெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. தென்னகத்தின் எல்லோரா என்று போற்றப்படுகின்றது. அஜந்தா எல்லோராவுக்கே இக்கோயில் மாதிரி வடிவம் ஆகும் என்றும் கருதப்படுகின்றது. மிகவும் அழகான சிற்ப வேலைபாடுகள் கண்ணைக் கவருகின்றன. 

 இங்கு விநாயகர் மூர்த்தியாக விளங்குகிறார். வெட்டுவான் என்றால் வெட்டுவோன் — கல்லை வெட்டுவோன் அதாவது சிற்பி என்பதே பொருளாகும். இக்கோயில் பற்றிய செவிவழிக் கதை ஒன்று கூறப்படுகின்றது.


 அதாவது பாண்டியனின் ஆட்சியில் மிகத் திறமை வாய்ந்த சிற்பி ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகன். ஒரு திருவிழாக் கூட்டத்தில் சிற்பியின் மகன் தொலைந்து போகின்றான். அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 
 சில காலங்களுக்குப் பிறகு இந்த சிற்பிக்கு ஒரு செய்தி கிடைக்கின்றது. அது என்னவென்றால் தன்னை விட சிறந்த சிற்பி ஒருவன் இவ்ஊருக்கு வந்துள்ளான் என்பது தான். இதனால் இவருக்கு மெல்ல மெல்ல பயம் குடிகொள்கிறது. அதுவே நாளடைவில் பொறாமையாக மாறுகிறது. எங்கே தன்னை விட இவன் நற்பெயர் எடுத்து விடுவானோ என்று ஆத்திரம் கொண்டு அவனை அழிக்க நினைக்கிறார். 

 அதுபோலவே அவனைக் காணச் செல்கிறார் அந்தச் சிற்பி. அப்போதுதான் அந்த இளைஞன் வந்திருப்பது தன்னுடைய தந்தை என்பதை அறிகிறான். தாந்தான் அவருடைய மகன் என்பதை கூறும் முன்னரே உளியால் அந்த இளைஞனின் தலையில் வெட்டவே அவன் இறக்கின்றான். அவன் இறக்கும் முன்பு அப்பா என்று அழைத்தபடியே உயிரை விடுகிறான். அப்போதுதான் அந்த சிற்பி உணர்கிறார் பெற்ற மகனையே நாம் கொன்று விட்டோம் என்று. இவ்வாறு ஒரு கதை கூறப்படுகின்றது. இந்த இளைஞன் வெட்டியதாலேயே வெட்டுவான் கோவில் என்றும், அவன் இறந்ததற்கு பின்னர் கோவில் பணி முழுமை அடையாமல் பாதியிலேயே நின்றுவிட்டது என்றும் கூறப்படுகின்றது. இப்போதும் இக்கோயில் அவ்வாறுதான் காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமணர் படுகை


 வெட்டுவான் கோவிலில் இருந்து சற்று உயரத்தில் உள்ளது சமணப்பள்ளி. இங்கே சமணர்கள் தங்கியதற்கான அடையாளமாக குகைகளும், தாய், மகள், குரு, தந்தை என அவர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. இதற்கு அருகிலேயே அய்யனார், பேச்சியம்மன், செண்பகம்மன், வீரப்பன் சுவாமி போன்ற காவல் தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. இங்க குலதெய்வ வழிபாடு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 இவற்றையெல்லாம் கண்டு வியந்து இரசித்து விட்டுக் கீழே இறங்கி வந்ததும் சாலையின் எதிர்த் தெருவில் ஜீவஜோதி சித்தர் ஜீவசமாதி உள்ளது. இவரை மிளகாய் பரதேசி சித்தர் என்றும் கூறுகின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு மிளகாய் வற்றல் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றது.  இங்குள்ள மாணவர்கள் இந்த மிளகாய் வற்றலை தங்கள் புத்தகத்தில் வைத்துக் கொள்வார்களாம். அவ்வாறு வைத்துக்கொண்டால் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் என்பது இங்கு நம்பிக்கையாக பின்பற்றப்படுகிறது. அவரையும் தரிசித்துவிட்டு மனநிறைவுடன் களப் பயணத்தை நிறைவு செய்துகொண்டு வீடு திரும்பினோம்.

சனி, 16 அக்டோபர், 2021

தாதா

தாதா என்ற இந்த சொல்லை கேட்ட உடனேயே அனைவருக்கும் சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் தாதா என்ற சொல் மக்கள் மத்தியில் பெரும்பாலும் பேசப்படும் ஒரு சொல்லாக இருக்கிறது என்றால் மிகையில்லை. அதுமட்டுமல்லாமல் திரைப்படங்கள் ஆகட்டும் அல்லது  செய்தித்தாள்கள் ஆகட்டும் அல்லது ஏதோ ஒரு தகவல் தொடர்பு ஊடகமாக இருந்தாலும் இன்றைக்கு தாதா என்ற சொல் மிகவும் அதிகளவில் பேசப்படும் பொருளாக அல்லது பேசப்படும் சொல்லாக இருக்கிறது என்று கூறலாம். வடமொழியில் பயன்படுத்தப்படும் தாதா என்ற என்ற சொல்லையே எல்லா மொழிகளிலும் இன்று வழங்கப்பட்டு வருகிறது எனலாம். அச்சொல்லின் பொருளை நாம் தமிழ்ப்படுத்தவில்லை. ஆனால் அச்சொல்லின் ஒலிக்குறிப்பை அப்படியே நாம் பயன்படுத்துகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சொல் வழங்கப்படும் பொருள் என்ன என்றால் ஒருவன் வீட்டுக்கும் சமூகத்திற்கும் கட்டுப்படாத பிள்ளையாக உருவாகிறான் என்றால் அவனை வீட்டுக்கு அடங்காத பிள்ளை என்று அழைப்போம். மேலும் அவன் சமூகத்தால் ரவுடி என்று அழைக்கப்படுவான் இல்லையா. இப்படி அடங்காப்பிள்ளை ரவுடி என்றெல்லாம் அழைக்கப்படக்கூடிய இச்சொல்லைத்தான் வடமொழியில் தாதா என்று வழங்கப்படுகிறது.  ஆனால் தமிழ் மொழியிலும் தாதா என்ற சொல் இருக்கிறது தெரியுமா? ஆம். ஔவையாரின் தனிப்பாடல் திரட்டில் ஒரு பாடல்.

"சுரதந் தனில்இளைத்த தோகை; சுகிர்த

விரதந் தனில்இளைத்த மேனி; நிரதம்

கொடுத்திளைத்த தாதா; கொடுஞ்சமரிற்                                                                   —பட்ட

வடுதுளைத்த கல்அபிரா மம்" எனும் 

இப்பாடலில், நிரதம் கொடுத்திளைத்த தாதா என்ற வரியில் வரும் தாதா என்ற சொல்லுக்குக் கொடையாளி என்று பொருள். எப்படி? 

ஒரு முறை சோழனும் ஔவையும் பேசிக்கொண்டிருந்த பொழுது சோழனுக்கு திடீரென்று ஒரு ஐயம் ஏற்பட்டது. அது என்னவென்றால், உலகில் மிகவும் அழகானது எது என்று ஐயம் ஏற்பட்டது. ஆகவே அவன் ஔவையிடம் கேட்டான். ஔவையே உலகில் மிகவும் அழகானவை எவை? என்று கேட்டான். அதற்கு அவர் பாடிய பாடல்தான் இப்பாடல். இதில் எதை எதை அழகு என்று ஔவை கூறியிருக்கிறார் என்றால், தலைவனுடன் கூடிக் களித்துப் பின் அதனால் ஏற்பட்ட உடல் சோர்விலும் கூட அத்தலைவியும்; இறைவனை எண்ணி பல நாட்கள் விரதம் பூண்டதால் உடல் மெலிந்த பக்தரின் மேனியும்; வரியவருக்குக் கொடுத்துக் கொடுத்துத் தன் செல்வம் அனைத்தையும் இழந்து போன கொடையாளியும்; போரிலே பகைவரை எதிர்த்துப் போர் புரிந்து அதனால் ஏற்பட்ட விழுப்புண் பெற்ற வீரனின் உடலும்; அங்ஙனம் போரில் இறந்த வீரர்களுக்கு நடப்படும் நடுகற்களும் சான்றோர்க்கு மிகவும் அழகானவை ஆகும் என்று ஔவையார் தன் பாடலில் குறிப்பிடுகின்றார். இதிலே தாதா என்ற சொல் கொடையாளி என்ற பொருளை நமக்கு உணர்த்துகின்றது. 

இவ்வாறு தமிழ்மொழியில் தாதா என்ற சொல் கொடுத்துக் கொடுத்துத் தன் செல்வத்தையெல்லாம் இழந்து போன கொடையாளி என்ற பொருளை  உணர்த்துவது வியப்பை நல்கியபோதும், தமிழின் சிறப்பையும் தமிழனின் பெருமையையும் ஒருசேர உணர முடிகிறது என்றால் மிகையில்லை.


வெள்ளி, 24 செப்டம்பர், 2021

எஞ்சாயி


நீண்ட நாட்களாக நான் தேடிக்கொண்டிருந்த ஒரு விடயத்திற்கு இன்று விடை கிடைத்தது. அதனால் மீண்டும் எழுதத் தொடங்கியுள்ளேன். அது என்ன என்றால் சமீபத்தில் ஒரு பாடல் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. சமூக வலைதளங்களில் மிகவும் பேசுபடு பொருளாக அது விளங்கியது. அப்பாடல் இதோ, 

"குக்கூ குக்கூ

தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி"
ஆம்! இப்பாடல் தான். இந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் மட்டுமல்லாமல் இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்று கூறலாம். இசையாக இருக்கட்டும் பாடல் வரிகளாக இருக்கட்டும் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நினைவுபடுத்தும் பாடலாக அனைவரும் பேசும் ஒரு பொருளாக விளங்கியது என்றால் மிகை இல்லை. 

அத்தகைய இப்பாடலில் எனக்கு முரண்பாடாக அல்லது உடன்பாடில்லாத சில வார்த்தைகள் இருப்பதாக உணர்ந்தேன். அந்த வார்த்தைகளைப் பற்றிய விளக்கங்களைத் தான் இன்றைக்கு இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். 

இப்பாடலில் பல்லவியை அடுத்துவரும் அனுபல்லவியில் கம்பளிப்பூச்சி எனும் சொல் வந்துள்ளது. அதாவது தண்ணீரில் ஓடும் தவளைக்கு கம்பளிப்பூச்சி தங்கச்சி எனும் வரிகள் இடம்பெற்றிருக்கும். 

"குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி"


முதலில் நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் கம்பளி என்பது பூச்சி இனம் அல்ல அது புழுவினம். பூச்சி இனங்களுக்கு நீளமான உடலமைப்பு இருக்காது. அது மட்டுமல்ல அவற்றிற்கு கால்கள் தனியாக இருக்கும். ஆனால் புழுக்களுக்கு கால்கள் தனியாக இருக்காது. அதன் உடலையே சுருக்கி விரித்து ஊர்ந்து செல்ல கூடிய உயிரினம் ஆகும். ஆகவே பேச்சுவழக்கில் கம்பளிப்பூச்சி என்ற சொல்வது தவறு என்பதை இதன் மூலம் நாம் உணரலாம். அங்ஙனம் இப்பாடலில் என்ன சொல் சரியான சொல்லாக பயன்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றால் தம்பலப்பூச்சி என்பதே சரியான வார்த்தையாகும். தம்பலப்பூச்சி என்பது நாம் அனைவரும் பார்த்து தொட்டு தூக்கி ரசித்து விளையாடிய பூச்சி இனங்களில் ஒன்று. இதனை பேச்சுவழக்கில் பட்டுப்பூச்சி என்றும் அழைப்பர். சிவப்பு நிறமாக அதனுடைய மேல் தோல் பட்டுபோல மென்மையாக இருக்கக் கூடிய ஓர் அழகான பூச்சியினம். இதற்கு இந்திரகோபப்பூச்சி என்ற பெயரும் உண்டு.


இத்தம்பலப் பூச்சி பற்றி அகநானூற்றின் பாடல் ஒன்று இயம்புகின்றது. அப்பாடல் பின்வருமாறு;

"அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழிக் காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன் ஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு" எனும் இவ்வரிகளில் ஈயல்மூதாய் எனும் சொல்லே தம்பலப்பூச்சியினை உணர்த்துகிறது என்பதை அறியமுடிகின்றது.

மேலும் இப்பாடலில் எஞ்சாயி எஞ்சாமி என்ற சொல் வருகின்றது. எஞ்சாயி என்னும் சொல்லைப் பிரித்தால் என் + ஆயி எனப் பிரியும். இதில் ஆயி என்பது குடும்பத்தின் மூத்த தலைவியாக விளங்கும் தாயின் தாயைக் குறிக்கும் சொல் ஆகும். ஆனால் இத்தகைய பொருள் பொதிந்த சொல்லை மொழிபெயர்ப்பு எனும் பெயரில் Enjoy என்று வழங்குவது வருத்தமளிக்கிறது. 


எஞ்சாயி எஞ்சாயா என்ற சொற்கள் நம்மில் பேசப்பட்டிருப்பதற்கு பழைய திருவிளையாடல் திரைப்படம் வசனம் சான்றளிக்கின்றது என்பது சற்றே மகிழ்ச்சி அளிக்கிறது. 

இங்ஙனம் முன்னோர்கள் பின்பற்றிய வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் பேச்சுவழக்கு போன்றவற்றை மரபு மாறாமல் பின்பற்றப்பட்டால் இதுபோன்ற இடர்பாடுகள் அறியாப் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலும்.


புதன், 21 ஜூலை, 2021

கன்னல்


"மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் 
பொன்னான மலரே 
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் 
தானாடும் நிலவே 
மின்னல் மின்னல் கொடி 
போலாடும் அழகே 
கன்னல் கன்னல் மொழி 
நீ பாடு குயிலே 
கட்டுக்குள்ள நிற்காது 
திரிந்த காளையை 
கட்டி வைத்து கண் 
சிரிக்கும் சுந்தரியே 
அக்கரையும் இக்கரையும் 
கடந்த வெள்ளத்தை 
கட்டி அணை கட்டி 
வைத்த பைங்கிளியே 
என்னில் நீயடி 
உன்னில் நானடி" 

என்ற இந்த அழகான வரிகள் கவிஞர் பிறைசூடன் இயற்றிய பாடல் வரிகள். இது ஒரு தமிழ் திரைப்படத்தில் வந்த அழகான திரைப்பட பாடல். இந்த பாடலை கேட்டு ரசிக்காதவர் யாரும் இருக்க முடியாது. அவ்வளவு ரம்மியமான  இசையுடன் கூடிய  பாடல். இப்பாடல் அடிகளில் ஒரு அழகான சொல் ஒளிந்திருக்கிறது. அது கன்னல் மொழி என்பதாகும். அது என்ன கன்னல் மொழி? இதற்கு என்ன பொருள்? அவற்றை இங்கே காண்போம்.

கன்னல் பொருள்


கன்னல் என்றால் கரும்பு என்று பொருள் கூறுகின்றது அகராதி. அதுமட்டுமல்ல கரும்பில் இருந்து கிடைக்கக்கூடிய சாறு (கரும்புச்சாறு), அதைக் காய்ச்சி கிடைக்கக்கூடிய பாகு (மணற்பாகு), பாகு முதிர்ந்த பிறகு கிடைக்கக்கூடிய சர்க்கரை இவை அனைத்திற்குமே கன்னல் என்று பெயர் கூறுகின்றது.

மேலும் கன்னல் எனும் சொல்லுக்கு நாழிகை வட்டில், நாழிகை, ஒரு வகைச் சிறு குருவி, கரகம் என்றும் பொருள் உணர்த்தப்படுகின்றது. 

இராமாயணத்தில் கன்னல்
"இன்னல் அம்பர வேந்தர்க்கு இயற்றிய
பன்னலம் பதினா லாயிரம் படை
கன்னல் மூன்றில் களப்படக் கால்வளை
வில்நலம் புகழ்ந் தேங்கி வெதும்புவாள்" 

எனும் காட்சிப்படலத்து அடிகள் இராமன் காட்டில் கரன் தூடணன் முதலியோர் உள்ளிட்ட (14000) பதினாலாயிரம் படைகளை மூன்று கன்னல் நேரத்தில் வென்றான் என்று கூறுகின்றது. கன்னல் என்றால் நாழிகை என்று பொருள். (2 1/2) இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம். அதாவது 60 நிமிடங்கள். அப்படி என்றால் ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள். எனவே மூன்று கன்னல் என்பது மூன்று நாழிகை. அதாவது 72 நிமிடங்கள். அதாவது 1.12 மணி நேரம் ஆகும். 

குறுநீர்க் கன்னல்

"பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள்
தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் குறுநீர்க் கன்னல் இணைத்தென்று இசைப்ப" 

எனும் முல்லைப்பாட்டு வரிகள் அக்காலத்தில் நாழிகையைக் கணக்கிட்டுக் கூறுவதற்குப் பயன்படுத்திய நாழிகை வட்டில் பற்றி குறிப்பிடுகின்றது. இதனைக் குறுநீர்க் கன்னல் என்று குறிப்பிட்டுள்ளனர்.

கரும்பின் வேறு பெயர்கள்



கன்னல், கழை, இக்கு, வேழம், வெகுரசம், வெண்டு, தும்பு, அங்காரிகை, ஈன், ஆலை, இக்கலம் என்று பல பெயர்களில் வழங்கப்படுகிறது.

செவ்வாய், 13 ஜூலை, 2021

நல்ல தமிழ்ச் சொற்கள்— 4


நாதாரி

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பன்றி மேய்க்கும் சமூகத்தவரைக் குறிக்கக்கூடிய சொல்லாக இச்சொல் வழங்கப்பட்டது. இன்றும் இச் சமூகத்தவர் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொல்காப்பியத்தில் பன்னிரு நிலங்களை பின்வருமாறு தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

"தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி பன்றிஅருவா அதன்வடக்கு — நன்றாய சீதமலநாடு புனல்நாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிரு நாட்டெண்" என்று 12 நிலங்களை செந்தமிழ் பேசும் நாடுகளாக அக்காலத்தில் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாடுகளாவன, 

1. தென்பாண்டி நாடு 2. குட்டநாடு

3. குடநாடு 4. கற்கா நாடு 

5. வேணாடு, 6. பூழி நாடு, 7. பன்றி நாடு, 

8. அருவா நாடு, 9. அருவா வடதலை நாடு, 

10. சீத நாடு, 11. மலைய நாடு (மலையமான் நாடு) 12. புனல் நாடு என்று 12 நிலங்களாக அக்காலத்தில் தமிழகம் விளங்கியது. இதில் பன்றிநாடு என்ற நாடு தற்போதைய தென் பகுதியாக விளங்குகின்ற திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த பகுதியாக குறிப்பிடப்படுகின்றது. இத்தகைய தமிழகத்தின் தென்பகுதியில் பன்றி மேய்க்கக்கூடிய சமூகத்தைசா சார்ந்த மக்களை அழைக்கக்கடிய ஒரு பெயராக வழங்கப்பட்டது தான் நாதாரி என்ற சொல். ஆனால் இன்று அது வசைச் சொல்லாக மாறி இருப்பது வருத்தத்திற்குரியது.

படவா

இச்சொல் முடிதிருத்தும் தொழிலாளிகளைக் குறிக்கக்கூடிய சொல்லாக விளங்கியது. மேலும் முடிதிருத்தும் சமூகத்தில் இந்த படவா என்ற பிரிவினர் மேல்சாதியினர் வீட்டுக்கே சென்று முடி திருத்தும் பணியைச் செய்ததாக குறிப்பிடப்படுகின்றது. இங்கனம் முடிதிருத்தும் சமூகத்தை குறிக்கக் கூடிய ஒரு சொல் இன்று வசைச் சொல்லாக மாறி இருப்பது வேதனை தருகிறது.

வெட்டி வேலை

வெட்டி வேலை எனும் சொல்லானது ஒரு காலத்தில் ஏரி குளம் கண்மாய்களை வெட்டுபவர்கள் குறிப்பிடும் சொல்லாக கருதப்பட்டது. எவ்வாறெனில் அக்காலத்தில் ஏரி குளம் கண்மாய் இவற்றை வெட்டுவதற்கு கிராம மக்கள், ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள். இதற்கு யாருக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. காரணம் அவர்கள் யாரும் ஊதியம் பெற விரும்பவில்லை. இச்செயலை ஒரு தொண்டு மனப்பான்மையோடு செய்தார்கள் என்று தான் கூறவேண்டும். ஊரின் நன்மையே நம் நன்மை என்று கருதி அம்மக்கள் செய்தார்கள். ஆகவே அந்த வேலைக்கு அவர்கள் ஊதியம் பெறவில்லை. மண்வெட்டியால் மண்ணை வெட்டி ஏரி குளம் கண்மாய்களை ஏற்படுத்திய காரணத்தினால் இவ் வேலைக்கு வெட்டி வேலை அதாவது மண்ணை வெட்டும் வேலை என்று குறிப்பதற்காக வெட்டி வேலை என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் இன்று எந்த வேலையையும் செய்யாதவர்களைக் குறிப்பிடும் சொல்லாக இது பொருள் மாறி வழங்கப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது. 

பொருள் மாறக் காரணம் என்ன?

நாம் நான்கு பகுதிகளாக நல்ல தமிழ்ச் சொற்கள் என்பது பற்றி பேசி வருகின்றோம். இத்தொடரில் வரும் அனைத்துச் சொற்களும் தற்போது பொருள் மாறி வழங்கப்பட்டு வருவதற்கு காரணம் என்ன? அதிலும் குறிப்பாக வசைச் சொற்களாக இவை வழங்கப்பட்டு வருவதற்கு காரணம் என்ன? அல்லது எவ்வாறு வசைச் சொற்களாக இவை மாறி இருக்கும் என்ற சிந்தனையின் அடிப்படையில் நோக்கினால், ஒரே ஒரு விஷயம் மட்டுமே தீர்வாக அமைகிறது. அது என்ன என்றால், அக்காலத்தில் நால்வருணப் பாகுபாடு என்பது தமிழகத்தில் பரவி கிடந்த ஒரு சமூக சீர்கேடான நிலை என்று கூறலாம். இந்நால்வருணப் பாகுபாடு பிற்காலத்தில் தொழில் அடிப்படையில் மக்களை பிரிக்கும் ஜாதிய பாகுபாடு என்று பேசப்பட்டது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு அல்லது அந்த பாகுபாட்டை உணர்த்துவதற்காகவே மீண்டும் மீண்டும் உயர்ந்த வகுப்பினைச் சார்ந்தவர்கள் தொழில்ரீதியான வர்க்கப் பாகுபாட்டினை உட்புகுத்தி மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளக் கையிலெடுத்த ஆயுதமே இந்த வசைச் சொற்கள். தாழ்ந்த வகுப்பினைச் சார்ந்தவர்களாகக் குறிக்கக்கூடிய மக்களை குறிப்பிடும் சொற்கள் அனைத்தையும் அவர்கள் வசைச் சொற்களாக மாற்றி பயன்படுத்த ஆரம்பித்னர். அதன் காரணமாகவே இச்சொற்கள் அனைத்தும் என்று பொருள் மாறிய சொற்களாக, வசைச் சொற்களாக நிற்கின்றன. நின்று தவிக்கின்றன. இதன் மூலம் அக்கால சாதிய பாகுபாடு எந்த அளவுக்கு கொடும் தீயாகப் பரவி இருந்தது என்பதை நம்மால் உணர முடிகின்றது. அதுமட்டுமல்லாது சாதியப் பாகுபாட்டை உணர்த்துவதற்காகவும் இவர்கள் தாழ்ந்த சாதியினர் என்பதை மேலும் மேலும் வலியுறுத்துவதாகவும் அவர்களை குறிக்கக்கூடிய சமூகச் சொற்கள் அனைத்தையுமே மேல்தட்டு மக்களாக சமூகத்தில் வலம் வருவோர் வசைபாடும் சொற்களாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிகின்றது.  இதில் வேதனையான செய்தி என்னவென்றால் ஒரு காலத்தில் மேல்தட்டு மக்களால் வசை பாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இச்சொற்கள் இன்று அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதே. 
இனியாவது விழித்தெழுவோம். 

முற்றிற்று.



திங்கள், 21 ஜூன், 2021

நல்ல தமிழ்ச் சொற்கள் — 3

மாமண்டூர்



மாமண்டூர் என்று கூறியதும் நம் நினைவுக்கு வருவது சிற்பக் கலை தான். ஆனால் இந்த ஊர்ப் பெயரில் உள்ள ஒரு சொல் இன்று அறிவிலி எனும் பொருளில் வழங்கப்பட்டு வருகிறது.

ஆம், அந்த சொல் மண்டு என்பது தான். அறிவில்லாத எனும் பொருளில் வழங்கப்பட்டு வரும் இச்சொல்லுக்கு என்ன பொருள்?

மண்டு — மண்டுதல் என்பது அதன் தொழிற்பெயர் ஆகும். மண்டுதல் என்றால் நிரம்பியிருத்தல்  என்று பொருள்.

உதாரணமாக

வீட்டில் சாம்பிராணி புகை மூட்டுகிறோம். அப்போது வீடு முழுவதும் புகை மண்டும் என்று கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 

இதேபோல் நிறைய பால் அருந்தும் குழந்தைகளைக் கேலியாக நல்லா ஒரு படிப்பாலை மண்டுகிறது என்று கூறுவது வழக்கம்.

ஆக மண்டு என்றால் நிரம்பி இருத்தல் என்பது பொருள். மாமண்டூர் என்னும் ஊர் பெயர் உருவாகக் காரணம், அறிவுடையோர் நிறைய பேர் நிரம்பியிருந்த ஊர் என்பதால் அப்பெயர் பெற்றதாகக் கருதப்படுகிறது.

இப்படி அறிவால், ஏதேனும் பொருளால் நிரம்பியிருத்தல் என்னும் பொருள் தரக்கூடிய சொல்லை அறிவிலி என்ற பொருள் தரக்கூடிய சொல்லாகப் பயன்படுத்துவது வேதனை தருகிறது.

காப்புமாறி


மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி நிலம். இக் குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் குறவர் என்றழைக்கப்பட்டனர்.
இவர்கள் சமவெளிப் பகுதிகளில் பயிர் செய்து வாழ்ந்தனர். அவ்வாறு பயிர் செய்து வாழும் இவர்கள் பயிரினைக் காவல் காக்கும் தொழிலையும் செய்து வந்தனர். இக்காவல் செய்யும் தொழிலை இரவு பகல் என்று இரண்டு வேளைகளிலும் மாறி மாறி காவல் புரிந்து அத்தொழிலை செய்து வந்தனர். இங்ஙனம் இரவு பகல் என்று இருவேளைகளிலும் மாறி மாறி காப்பு செய்ததால் காப்பு மாறி என்று அத்தொழிலை செய்வோர்  அழைக்கப்பட்டனர். காப்பு மாறி என்ற சொல்லானது இன்று கேப்மாரி என்னும் ஏசுதல் பொருளில் வழங்கப்பட்டு வருவது வருத்தத்திற்குரியது.

தொடரும்....

செவ்வாய், 8 ஜூன், 2021

நல்ல தமிழ்ச் சொற்கள் — 2

மடை

ஏரி குளம் கண்மாய்களில் நீரைத் தேக்கி வைத்து விவசாயத்திற்கு அவ்வப்போது தேவைப்படும் பொழுது அந்த நீரை திறந்து விடுவதற்காக அமைக்கப்பட்ட சிறிய வாசல் போன்ற பகுதி அமைப்பதுண்டு. அவருக்கு கதவும் உண்டு. இக் கதவு மறுத்தாலோ அல்லது இரும்பினால் செய்யப்பட்டு இருக்கும். அந்த சிறிய துவாரத்திற்கு மடை என்று பெயர். 

மழைக்காலத்தில் இந்த மடையின் கதவினைத் திறப்பதற்கென்றே சிலர் நியமிக்கப்பட்டிருப்பர். அவர்கள் படையைத் திறப்பவர்கள் என்பதால், அவர்களுக்கு மடையர்கள் என்று பெயர்.

இத்தகைய தொழிற் பெயராக விளங்கக்கூடிய மடையன், மடையர் எனும் சொற்கள் இன்று அறிவில்லாதவர், மூளை இல்லாதவர், அறிவைப் பயன்படுத்தாதவர், மூளையைப்  பயன்படுத்தாதவர் என்னும் பொருளைக் குறிக்க கூடிய சொல்லாக மாறி வழங்கப்படுகின்றது. 



முட்டுக்கட்டை

பொதுவாக ஏதாவது ஒரு காரியத்தைச் செய்வதற்கு யாராவது தடைக்கற்களாக இருந்தார்கள் என்றால், ஏன் முட்டுக்கட்டையாக இருக்கிறாய் என்று கேட்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அத்தகைய முட்டுக்கட்டை என்பது என்ன? திருவிழாக்காலங்களில் தேர் இழுப்பது வழக்கம். இந்தத்தேர் தெருவிலே நிதானமாகவும் தடம் புரளாமலும் செல்வதற்குப் பயன்படுத்தக்கூடிய கட்டைக்கு முட்டுக்கட்டை என்று பெயர். தேரானது தெருவிலே திரும்பும்பொழுது தேரின் சக்கரத்தில் ஒரு கட்டையைக் கொடுத்து அதனை லாவகமாகத் திருப்புவதற்கு முயற்சி செய்வார்கள். அவ்வாறு தேரைத் திருப்புவதற்குப் பயன்படுத்தக்கூடிய கட்டைக்கு முட்டுக்கட்டை என்றும்; 



அந்தக் கட்டையைக் கொடுத்து லாவகமாகத் தேர் திரும்புவதற்கு உதவியாக இருக்கக்கூடிய நபருக்கு முட்டாள் (முட்டுக்கொடுக்கும் ஆள்) என்றும் பெயர். ஆனால் இன்று முட்டாள் என்னும் சொல்லானது அறிவில்லாதவன், மூளை இல்லாதவன் என்னும் பொருளில் பயன்படுத்தப்படுவது வருத்தம் அளிக்கின்றது. காரணம் முட்டுக்கொடுக்கும் ஆள் தேரினுடைய ஓட்டத்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் மிகவும் சாதுரியமாக அந்தக் கட்டையை வைத்து அது சரியான பாதையில் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதற்கு முதலில் அந்த நபருக்கு உடல் பலமும் அறிவுத் திறனும் இருக்க வேண்டும். அந்நபர் புத்திசாலியாக இருந்தால் தான் அவரால் தேரை சரியான தடத்தில் செல்ல வைக்க முடியும். ஆனால் இன்று இவ்வரிய சொல்லானது பொருள் மாறிப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது வருத்தத்துக்குரியது.



தொடரும்.,


திங்கள், 31 மே, 2021

நல்ல தமிழ்ச் சொற்கள் — 1



இன்று தமிழில் எண்ணற்ற சொற்கள் வழக்கு மாறி, பொருள் மாறிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.
ஒரு காலத்தில் அர்த்தமுடன் பயன்படுத்தப்பட்ட தமிழ்ச் சொற்கள் இன்று அர்த்தமற்றதாகவும் இருக்கிறது. எதிர்மறை அர்த்தங்களுடனும் விளங்குகின்றது.
ஒரு மொழியில் காலத்தால் சொற்களின் உச்சரிப்பு கூட மாறிப்போக வாய்ப்பு இருக்கிறது. அதுகூடத் தவறில்லை. ஆனால் ஒரு சொல்லுக்கான பொருள் மாறுவதுதான் மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி.
அப்படித் தமிழில் காலத்தால் பொருள் மாறிப்போன சொற்கள் எண்ணற்றுக் காணப்படுகின்றன. அவற்றைத்தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம்.

நாற்றம்

தமிழில் நாற்றம் எனும் சொல்லுக்கு நல்ல மணம் நறுமணம் என்று பொருள். ஆனால் இன்றோ பேச்சுவழக்கில் இச்சொல் நாத்தம் என்று உச்சரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது இச்சொல்லுக்கான பொருள் துர்நாற்றம் எனும் பொருளில் நாம் பயன்படுத்தி வருகிறோம் என்பதே மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. துர்நாற்றம் என்றால் நம்மால் நுகர முடியாத அளவு இருக்கக்கடிய கெட்ட நாற்றம் என்று அர்த்தம். சில வேதியல் பொருள்கள் மூக்கால் நுகர முடியாத அளவு அதிக நெடியாக இருக்கும் என்று கூறுவோம். உதாரணமாக ஆசிட் என்று கூறக்கூடிய அமில பொருள் இருக்கக்கூடிய புட்டி கீழே விழுந்து உடைந்தாலோ அல்லது அந்த அமில பொருள் கீழே கொட்டப்பட்டாலோ ஒருவித நுகர முடியாத அளவு இருக்கக்கூடிய அந்த நாற்றத்திற்கு நெடி (strong pungent smell) என்று பெயர்.
இவ்வாறு மூக்கினால் நுகர முடியாத அளவு இருக்கக்கூடிய நாற்றத்தை நாம் துர்நாற்றம் அல்லது நெடி என்று கூறுவோம். 
ஆனால் இன்றைக்கு நாற்றம் என்ற சொல்லை நல்ல மணம், நறுமணம் என்று கூறத் தவிர்த்து, மூக்கினால் நுகர முடியாத அளவு இருக்கக்கூடிய துர்நாற்றத்திற்கு பயன்படுத்தக்கூடிய சொல்லாகப் பொருளை மாற்றிப் பயன்படுத்தி வருகின்றோம்.

நாற்றம் எனும் சொல் உணர்த்தும் பொருள்கள்

மணம், வாசம், துர்க்கந்தம், கள், சம்பந்தம், தோற்றம் என்று நாற்றம் என்ற சொல்லுக்கு பொருள்கள் அமைகின்றன. இதில் மனம் வாசம் ஆகிய சொற்கள் நல்ல மணம் நறுமணம் என்ற பொருளில் அமையும்.

மணம்

மண்ணிலிருந்து தோன்றும் ஒருவித நாற்றத்தை குறிக்கும் சொல்லாக மணம் என்ற சொல் பிறந்தது. மண் — மணம் என்றானது. மண்ணின் மணத்தைக் குறிக்கும் சொல்லே மணம் என்று வழங்கப்பட்டது. பின்னர் அதுவே நல்ல மணம் என்று குறிக்கும் சொல்லாக உருவானது.

வாசம்

ஒரு பொருளின் நாற்றம் காற்றினால் வீசப்பட்டு நம்மால் நுகரப்படும் பொழுது அதற்கு வாசம் என்று பெயர் ஏற்பட்டது. அதாவது மலரின் நாற்றம் காற்றினால் வீசப்படுவதால் வாசம் என்றானது.
பேச்சுவழக்கில் வீச்சம் என்ற சொல்லும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  காரணம் காற்றால் வீசப்படுகின்ற காரணத்தினால் அதற்கு வீச்சம் என்று பெயர் வந்தது.

துர்க்கந்தம்

துர்க்கந்தம் எனும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் offensive smell என்று பொருள் உணர்த்தப்படுகிறது. Offensive smell என்றால் தாக்குதலான மனம் அதாவது உயிரைக் கொல்லுகின்ற (வதைக்கின்ற) மனம் என்று பொருள். இதை எப்படி புரிந்து கொள்வது? அதாவது ஒருவரின் உடலில் நெருப்பு பற்றி எரியும் பொழுது ஏற்படும் ஒருவித நாற்றத்திற்குத் துர்க்கந்தம் என்று பெயர். இப்படியும் கூறலாம், அதாவது இறந்தவர் சடலங்களை எரிக்கும் பொழுது ஏற்படும் ஒருவித நாற்றத்தைத் துர்க்கந்தம் என்று அக்காலத்தில் வழங்கியிருக்கின்றனர். இதற்குத் தமிழில் தீ நாற்றம் என்று பொருள் உரைக்கப்படுகிறது. தீ நாற்றம் என்பது கெட்ட மணம் என்றும்; தீயினால் ஏற்பட்ட மனம் என்றும் கூறலாம்.

கள்

அக்காலத்தில் கள் என்று அழைக்கப்படும் பனைமரத்துப் பொருளானது உண்ணும் உணவுப் பொருட்களில் ஒன்றாகவே போற்றப்பட்டது என்று கூறலாம். இதற்குச் சங்க இலக்கியங்களில் அநேக சான்றுகள் காணக்கிடைக்கின்றன. இதனை மறுப்பதற்கு இல்லை. இக்கள் எனும் சொல்லுக்கும் நாற்றம் என்றே பொருள் உணர்த்தப்பட்டுள்ளது.

சம்பந்தம்

நாற்றம் என்ற சொல்லுக்குச் சம்பந்தம் என்று பொருள்  வழங்கப்பட்டுள்ளது. இன்றும் பேச்சுவழக்கில் உன் நாத்தமே வேண்டாம் என்று கூறுவதை கேள்விப்பட்டிருக்கலாம். (உன் நாற்றமே வேண்டாம்) இதற்கு என்ன பொருள்?  உன் உறவே வேண்டாம் என்று பொருள். அதாவது உங்கள் சம்பந்தமே எங்களுக்கு வேண்டாம் என்று பொருள்.

தோற்றம்

தோற்றம் என்றால் உருவம் என்று பொருள். அவ்வாறுதான் நாம் வழங்கி வருகின்றோம் இன்றுவரை. ஆனால் நாற்றம் எனும் சொல்லைத் தோற்றம் என்ற பொருளில் வழங்கி இருக்கின்றனர் நம் முன்னோர். இது சாத்தியமா? என்று கேட்டால் சாத்தியமே. எப்படி? இன்றைக்கும் பேச்சுவழக்கில் அவன் நாற்றம் எங்களுக்குத் தெரியும் என்று கூறுவார்கள். இதற்கு என்ன பொருள்? அவனுடைய செயல்பாடுகள், அவனுடைய உருவம் என்று அவனுடைய அனைத்தும் தெரியும் என்று தங்களுக்குத் தெரிந்தவரைப் பற்றி ஒருவர் மற்றொருவரிடத்துக் கூறுவதற்கு இச்சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். 

இவ்வாறு நாற்றம் எனும் சொல்லுக்குப் பல்வேறு பொருள்களைக் கொண்டு பயன்படுத்தி வந்தனர் நம் முன்னோர்கள்.
ஆனால் இன்று அச்சொல்லுக்கான பொருள் துர்நாற்றம் என்ற பொருளில் வழங்கப்பட்டு வருவது மிகவும் வேதனை அளிப்பதாக விளங்குகின்றது. இந்நிலை மாற வேண்டும் என்றால், இதை அனைவரும் உணர வேண்டும். அது மட்டும் அல்ல நம் வாழ்க்கையில் நாம் அதை கடைபிடிக்க வேண்டும். நம் அடுத்த தலைமுறையினருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

புதன், 26 மே, 2021

தீபாவலி தீபாவளி ஆனது எப்போது?



தீபாவளி ஐப்பசி மாதத்தில்  திரயோதசிசதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது.

தீபாவளி கொண்டாடக் காரணங்கள்




திருமால் வராக அவதாரம் எடுத்தபோது பூமாதேவிக்குப் பிறந்த மகன் பவுமன்  என்பவன் ஆவான். இவன் பிராக்ஜோதிசா என்னும் நாட்டை ஆண்டு வந்தான். இது இன்றைய அசாம் மாநிலம் ஆகும். 

பிரம்மனை நோக்கித் தவம் புரிந்தான் பவுமன். தவத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மன் என்ன வரம் வேண்டும் கேள் என்றார். அதற்கு மரணமே தன்னை நெருங்க கூடாது என்று வரம் கேட்டான். ஆனால் பிரம்மனோ உலகில் பிறக்கும் உயிர்கள் யாவும் ஒருநாள் இறக்க வேண்டும் என்பது நியதி என்று கூறினார். எனவே அவன் தன்னுடைய தாயால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். பிரம்மனும் அவ்வாறே வரம் அளித்தார். 

இப்படி சாகாவரம் பெற்ற அவன் அன்றுமுதல் நரகாசுரன் ஆனான். தேவர்களுக்கு மிகுந்த இம்சைகளை விளைவித்தான். அதுமட்டுமல்லாது பெண்களுக்கு மிகவும் தொல்லை அளித்து வந்தான். 




இதனால் ஆத்திரம் கொண்ட திருமால் தன்னுடைய கிருஷ்ணா அவதாரத்தில் சத்யபாமாவின் மூலமாக நரகாசுரனை அழிக்கத் திட்டமிட்டார். காரணம் கிருஷ்ண அவதாரத்தின் போது பூமாதேவியே சத்தியபாமாவாக அவதரித்தாள். சத்யபாமாவின் மூலம் நரகாசுரன் அழிக்கப்பட்டான். நரகாசுரன் வதைக்கப்பட்ட அன்று தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த காரணத்தினால், அன்றைய தினம் உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று திருமாலிடம் வரம் கேட்டான் நரகாசுரன். அதன் பொருட்டு தீபாவளி கொண்டாடப் படுகிறது என்று புராணம் கூறுகின்றது.

இது ஒருபுறம் இருக்க, 




இராமாயண காலத்தில், இராவணனுடன் போர் புரிந்து ராமன் சீதையை மீட்டு, அயோத்தி திரும்பி வரும் அந்த நாளில், அயோத்தி மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் விளக்கேற்றி இராமனை வரவேற்றதாகக் கூறப்படுகின்றது. அதன் பொருட்டு அன்றிலிருந்து அந்நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

அதுமட்டுமல்ல, 




கந்த புராணத்தின் படி சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். அங்ஙனம் சக்தியைத் தன்னுள் பாதியாக ஏற்றுக் கொண்டதும், சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக உருவம் பெற்றதும் இந்த தினத்தில்தான் என்று கூறுகின்றது கந்தபுராணம். அன்றுமுதல் அன்றைய தினம் தீபாவளியாக கொண்டாடப் படுகின்றது என்றும் கருத்து நிலவுகின்றது.

ஆனால் இவற்றுக்கெல்லாம் மாறாக ஓர் உண்மை




சமணர்களின் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரத்திலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையில் தங்கியிருந்த போது அங்குக் குழுமியிருந்த மக்களுக்கு அறவுரை செய்தார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் நிறைவுபெற்றது. அதனால் அனைவரும் கேட்டுக்கொண்டிருந்த படியே தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர். வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே வீடுபேறு அடைந்தார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் வீடுபேறு அடைந்திருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு கலந்து ஆலோசனை செய்து, உலகத்திற்கு ஞான ஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் வீடுபேறு பெற்ற நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா தீபாவலி என்னும் பெயரால் கொண்டாடப்படுகின்றது.(தீபாவலி = தீபம் + ஆவலி. தீபம் என்றால் விளக்கு ஆவலி என்றால் வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்த படியால் தீபாவளி விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதல்லவா. (சமணமும் தமிழும் — மயிலை சீனி. வேங்கடசாமி)

சிந்திக்க வேண்டியது,

நரகாசுரன் உடன் நிகழ்ந்த போர் இரவு முழுவதும் நடந்து விடியற்காலையில் நரகாசுரன் கொல்லப்பட்டான் என்று புராணம் கூறுகின்றது. ஆனால் யுத்த தர்மப்படி இரவில் போர் நிகழ்த்தக் கூடாது என்பது யாவரும் அறிந்ததே. சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரையில் மட்டுமே போர் நிகழும். மீண்டும் மறுநாள் சூரிய உதயத்தின் போது தான் போர் துவங்கும். ஆனால் நரகாசுரன் வதம் அல்லது நரகாசுரனுடன் நிகழ்ந்த போர் இரவில் நிகழ்ந்ததாகப் புராணம் கூறுகின்றது.  இதிலிருந்து இப் புராணக்கதை புனையப்பட்டு இருக்கிறது என்பதை நாம் உணர முடியும். 

சமணர்களின் பல்வேறு வழக்கங்கள் இன்று இந்துக்களிடமும் இருக்கிறது. இதற்கு காரணம், சமண சமயத்தின் வீழ்ச்சிக்குப் பின் சமணர்கள் பலர் இந்துக்களாக மாறினர் என்பதே. 

நீக்கமற நிறைந்த முருகன்

24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி...