என் வீட்டுத் தோட்டத்தில் பாரிஜாதம் பூத்திருந்தது. நான் அன்று தான் முதன்முதலாக நேரில் பார்க்கிறேன். காலை வேளையில் மழைமேகம் சூழ்ந்த வானமும் அதில் ஐப்பசி மாத மூடுபனியும் ஒருங்கே பெற்ற இரம்யமான நேரம். நான் செடியின் அருகே செல்லச்செல்ல அதன் சுகந்தம் அதாவது நறுமணம் என்னை அப்படியே அதன்வசம் இழுத்தது. அப்போது தான் புரிந்தது இம்மலர் ஏன் தேவலோகம் சஞ்சரிக்கும் மலராக இருந்தது என்று. என்னவொரு வாசனை தெரியுமா? அப்பப்பா அதைச் சொன்னால் புரியாது. அனுபவித்தால் மட்டுமே சுகிக்க முடியும்.
பேரதிர்ச்சி
அப்போது தான் தற்செயலாக எனக்கு தோன்றியது இணையத்தில் இம்மலரைப் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என்று தேடத் தொடங்கினேன். ஒரே அதிர்ச்சி.... பாரிஜாதம் என்ற மலரை பலபேர் பவளமல்லி என்று தவறாகத் தகவல்களைப் பதிவேற்றம் செய்திருப்பது கண்டு மனம் வருந்தினேன். இணையம் என்பது மிகப் பெரிய ஊடகம். இவ்ஊடகம் எதிர்காலத் தலைமுறையினருக்கு உரிய ஒப்பற்ற சாட்சியங்கள் நிறைந்த பெட்டகம். வரலாற்று உண்மைகளை எடுத்துக் காட்டும் கண்ணாடி. ஆதாரங்களையும் ஆவணங்களையும் சுட்டிக் காட்டும் கருத்துக்கூடம்.
ஆனால் தவறான பதிவேற்றங்களால் எதிர்காலத்தில் இணையம் என்பது பொய்மையும் போலியான கருத்துக்களும் நிரம்பிய குப்பையாகக் கருதும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டு மனிதனாலேயே அழிக்கப்பட்ட ஒன்றாகவும் மாற அநேக வாய்ப்புகள் உள்ளன. ஆம் சற்றேறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் இணையம் என்றால் என்னவென்று யாருக்குமே தெரியாது. ஆனால் இன்று பிறந்த குழந்தைக்குக்கூட மிகவும் பரிச்சயமானதாக இந்த இணையம் உள்ளது இல்லையா. இன்னும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு நாம் உந்தப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை அல்லவா. சரி விசயத்திற்கு வருகிறேன்.
பாரிஜாதம்
பாரிஜாதம் என்பது 12 இதழ்களும் வெள்ளை நிறமும் கையளவுகொண்ட அழகான மலர். இதன் இதழ்கள் ஒவ்வொன்றும் எருக்கு இலைபோல தடிமனாக இருக்கும். கீழே ஆறு இதழ்களும் அதற்கு மேலே ஆறு இதழ்களும் கொண்டு நடுவில் கம்பி போன்ற மகரந்தச் செதில்களும் கொண்டு விளங்கும் நறுமணம் மிகுந்த மலர். ஒரே ஒரு மலரே செடியைச் சுற்றிலும் ஒரு மீட்டர் தூரம் வரை நறுமணத்தைப் பரப்பும் தன்மை கொண்டது. அப்படி என்றால் கொத்துக் கொத்தாகப் பூத்தால் அந்த தோட்டம் முழுவதும் நறுமணம் கமழும். இது தான் என் வீட்டில் பூத்த பாரிஜாதமலர்.
கையளவு கொண்ட மலர் என்று கூறினேன் அல்லவா. எவ்வளவு பெரிதாக உள்ளது பாருங்கள். இதனால் தான் இம்மலர் தேவலோகத்தில் வாசம்செய்யும் பேறு பெற்றது போலும். இம்மலருக்கு ஒரு புராணக்கதை ஒன்று கூறப்படுகிறது. அதைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.
ஒரு சமயம் தேவலோகம் சென்றிருந்த நாரதருக்கு தேவேந்திரன் ஒரு பாரிஜாத மலரைக் கொடுக்க, அதை அவர் எடுத்து வந்து கிருஷ்ணனிடம் தர, அதனைக் கிருஷ்ணன் தன் கையாலேயே ருக்மிணிக்குத் தலையில் சூட்டினார்.
அடுத்து சத்தியபாமையின் இல்லம் சேர்ந்த நாரதர் பாமாவிடம் நடந்தவற்றைக் கூறி அவள் மனதில் அசூயையை உண்டாக்கினார். சற்று நேரம் கழித்து பாமாவின் இல்லம் வந்த கிருஷ்ணனை பாமா தக்கமுறையில் வரவேற்காமல் அழுதவண்ணம் கோபமாகப் படுத்திருந்தாள். அவளைச் சமாதானப்படுத்தி எழுப்பி காரணத்தை அறிந்துகொண்டு பாமாவின் இல்லத்திற்கு பாரிஜாத மரத்தையை கொண்டு வந்து தருவதாக வாக்களித்தார். நரகாசூரன் வதத்திற்குப் பின் இந்திரனுக்கு உதவிய கிருஷ்ணன் இந்திரனிடம் பாரிஜாத மரத்தைக் கேட்டுப் பெற்றுவர நாரதரை அனுப்ப, அவன் மறுத்திட இந்திரனுக்கும் கிருஷ்ணனுக்கும் மரத்துக்காக போர் நிகழ்ந்தது. காசிப முனிவர் அறிவுரைப்படி பாரிஜாத மரத்தைத் துவாரகைக்கு அனுப்பி வைத்தான் இந்திரன்.
மரம் பாமாவிற்குக் கிடைத்தது பற்றி மனமகிழ்ந்த அவள் மலர்கள் அருகே உள்ள ருக்மிணி வீட்டில் குவிவது பற்றி திரும்பவும் கோபம் கொண்டாள். ருக்மணி மீது பொறாமையும் ஏற்பட்டது. மறுநாள் கிருஷ்ணன் பாமாவுடன் ருக்மிணியின் வீட்டிற்குச் சென்றார். ருக்மிணி அகமகிழ்ந்து வரவேற்றாள். ருக்மணி உள்ளே சென்று தொடுத்து வைத்திருந்த பாரிஜாத மலர் மாலையை எடுத்து வந்து கிருஷ்ணனுக்குச் சூட்டி மகிழ்ந்தாள். அப்போது கிருஷ்ணன் ருக்மிணியிடம் எல்லா மலர்களையும் எனக்கே சூட்டிவிட்டாயே? உனக்கு எங்கே? என்று கேட்டார். அதற்கு ருக்மிணி என்னையே பகவானுக்கு அர்ப்பணித்தவிட்ட பிறகு எனக்கென்று வேறு எதற்கு? பகவான் மகிழ்ச்சியே எனக்கு நிறைவைத் தருகிறது என்றாள். இதைக் கேட்டு சத்தியபாமா வெட்கித் தலை குனிந்தாள். பாமா மலரைத் தானே சூடி மகிழ நினைத்தாள். மலர் கிடைப்பது அரிதாயிற்று. அதனை பகவானுக்கே அர்ப்பித்தாள் ருக்மிணி. எனவே தான் முயற்சி இல்லாமலேயே மலர் ருக்மிணிக்குக் கிடைத்தது. பாமா முயன்றும் அவளால் பெற முடியவில்லை. அப்போது சத்தியபாமா தன்னை மன்னித்து விடுமாறு வேண்டி கிருஷ்ணன் பாதங்களில் விழுந்து வணங்கினாள். பாமாவின் மனத்தில் இருந்த துவேஷம் நீங்கியது பற்றி மகிழ்ச்சியைத் தெரிவித்தார் கண்ணன். அன்று முதல் தன் வீட்டில் விழும் பாரிஜாத மலர்களைப் பறித்து ருக்மிணிக்குக் கொடுத்து வந்தாள்.
இதுதான் அந்த கதை. ஆகவே பாரிஜாதம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் பூமிக்கு வந்தது என்றும் அவருக்கு மிகவும் பிடித்த மலர் என்பதும் புராணங்களின் வழி நமது நம்பிக்கையாகவும் உள்ளது.
அடுத்து பவளமல்லி பற்றி பார்ப்போம் வாருங்கள்....
பவளமல்லிகை
இதுவும் என் வீட்டில் மலர்ந்தது தான்
பவளம் என்பது நவரத்தினங்களுள் ஒன்று என்பது யாவரும் அறிந்ததே. இதன் நிறம் சிவப்பு. மல்லிகை போல் அதீத மணம் பரப்பும் வெள்ளை நிறம் கொண்ட மலராக இருந்தாலும் அதன் காம்பு பவளம் போல் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். காம்பு சிவப்பு நிறத்தில் இருப்பதால் பூவின் உட்புறநடுவிலும் சிவப்பு நிறமானது மிகவும் அழகாகத் தென்படும். எனவேதான் இம்மல்லிகை மலருக்கு பவளமல்லிகை என்று பெயர் ஏற்பட்டது. இம்மலர் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மலர்ந்து சூரியோதயம் வருவதற்கு முன்பே உதிர்ந்துவிடும். இம்மலர் அளவில் ஒரு அங்குல அளவே இருக்கும். அதாவது ஒரு இன்ச் அளவு மட்டுமே இருக்கும். பெரும்பாலும் ஆறு இதழ்களே இருக்கும். சிலசமயம் மட்டுமே எட்டு இதழ்கள் கொண்டு விளங்குகிறது. இதன் நறுமணமும் அவ்விடம் முழுவதும் நிரம்பி தெய்வீக ஆற்றலைப் பரப்பும் தன்மை கொண்டது. மேலும் இம்மலர்ச்செடி வாஸ்து தோசம் நீக்கும் தன்மை கொண்டது என்று நம்பப்படுகிறது.
இதற்கும் ஒரு சுவாரஸ்யமான புராணக்கதை ஒன்று உள்ளது....
தேவலோக கன்னியர்கள் என ரம்பை ஊர்மிளை மேனகை திலோத்தமை இவர்களைக் கருதுவோம் இல்லையா.
இவர்களைப்போலவே பவளமல்லிகை என்ற தேவகன்னியும் இருந்தாளாம். அவள் சூரியன் மீது மிகுந்த காதல் கொண்டாளாம். ஒரு நாள் தன் காதலை சூரிய பகவானிடம் அவள் தெரிவித்தாளாம். ஆனால் சூரிய பகவானோ அவளின் காதலை ஏற்க மறுத்துவிட்டாராம். அதனால் ஆத்திரம் கொண்ட பவளமல்லிகை இனி என்றுமே உன்முகத்தில் விழிக்கவேமாட்டேன் என்று சபதம் ஏற்று பூலோகம் வந்து ஒரு செடியாக மாறினாளாம். அவளே இந்த பவளமல்லிகைப் பூச்செடியாம். அதனால் தான் இப்பவளமல்லிகை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தோன்றி சூரிய உதயத்திற்கு முன்பே உதிர்ந்துவிடுகிறதாம். இதோ இப்படி......
ஆகமொத்தத்தில் இந்திரலோகம் என்ற தேவலோக விருட்சங்களில் ஒன்று பாரிஜாதம். தேவலோக கன்னியர்களில் ஒருவள் பவளமல்லிகை.
(பெயர்கூட ரம்பை ஊர்மிளை மேனகை திலோத்தமை போலவே பவளமல்லிகை என்று ஐகாரத்தில்தான் முடிகிறது என்று நாமும் ஒரு முடிவுக்கு வருவோம்.)
புராணக் கதைகள் எவ்வாறு இருப்பினும் பாரிஜாதம் வேறு. பவளமல்லிகை வேறு என்பது மட்டும் உறுதி.
நன்றி🙏