ஆசியர் பணியே அறப்பணி. அதற்கே உன்னை அர்ப்பணி! என்ற வாக்கு எவ்வளவு மகத்துவமானது என்பதை நான் சில தினங்களுக்கு முன்பு தான் உணர்ந்தேன். காரணம் மாணவர்களுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தினம் தினம் கற்கத் துவங்குகிறோம். அதுபோலவே அவர்களுக்கு ஒரு விடயத்தை எடுத்துச் சொல்வதற்காகவும் அல்லது அவர்களுக்கு அதை நேரில் காண்பிப்பதற்காக நாமும் உடன் செல்கின்றோம். இதனால் அவர்களும் அறிந்து கொள்கிறார்கள். நாமும் தெரிந்து கொள்கின்றோம். அந்த வகையிலே சில தினங்களுக்கு முன்பு மாணவிகளை அழைத்துக்கொண்டு கழுகுமலை சென்றோம்.
கழுகுமலை
எங்கள் கல்லூரியில் இருந்து கழுகுமலை சரியாக 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இம்மலைக் கோவிலில் முருகன் வழிபடு கடவுளாக விளங்குகின்றான். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னனின் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. இக்கோவிலின் கிழக்குப் பக்கமாக 100 மீட்டர் தொலைவில் வெட்டுவான் கோவிலும் அதிலிருந்து சற்று மேலே மலை உச்சியில் சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக சமணப்படுகையும் குகையும் உள்ளது.
தல வரலாறு
இக்கோவிலில் இராமாயண காலத்து கதை ஒன்று பேசப்படுகின்றது. கழுகின் அரசனான ஜடாயுவின் சகோதரனான சம்பாதி இத்தலத்திற்கு வந்து தவம் புரிந்து முருகனின் அருளைப் பெற்று முக்தி அடைந்ததாக கூறப்படுகின்றது.
இராமன் வனவாசம் சென்ற பொழுது சீதை இராவணனால் கவர்ந்து செல்லப்பட்டாள். அப்போது ஜடாயு இராவணனைத் தடுக்க முயன்றார். ஆனால் இராவணன் தன் வாளால் ஜடாயுவின் இறக்கைகளை வெட்டிக் கீழே தள்ளிவிட குற்றுயிரும் குலையுயிருமாக தவித்தார். அப்போது அவ்வழியே சீதையைத் தேடி வந்த இராமன் ஜடாயுவைக் கண்டார். ஜடாயு நடந்ததை எல்லாம் இராமனிடம் சொல்லிய பிறகே தன் உயிரை விட்டார். எனவே இராமன் ஒரு தகப்பனுக்குச் செய்ய வேண்டிய இறுதிக்காலக் கடமையாக எண்ணி ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார்.
இதனை சில காலங்களுக்குப் பிறகு அனுமனால் சம்பாதி அறிந்து கொள்ள, மிகவும் வருத்தப்படுகிறான். காரணம் தன்னுடைய சகோதரனுக்கு ஈமக்கிரியை செய்யாமல் விட்டதை எண்ணி தனக்கு தோஷம் பீடித்துக்கொண்டது என்று கலங்குகின்றான். இராமனிடம் இது குறித்து கேட்டு இதற்கு ஏதாவது விமோசனம் இருக்கிறதா என்று வினவுகின்றான். இராமனும் கஜமுக பர்வதம் என்று தென்னகத்தில் ஒரு மலை உள்ளது. அங்கு முருகன் வீற்றிருக்கின்றான். அங்கு சென்று தவமியற்றி முருகனுடைய அருளைப் பெற்று ஆம்பல் நதியில் நீராட உன்னுடைய பாவம் போகும் என்று கூறுகின்றார்.
அதன்படியே சம்பாதி என்று சொல்லக்கூடிய கழுகின் அரசன் இங்கே வந்து தவம் இயற்றி தன்னுடைய பாவத்தைப் போக்கிக் கொண்டு முத்தியும் பெற்றதாக வரலாறு கூறுகின்றது. அதனாலேயே அரைமலை என்னும் பழைய பெயர் கொண்ட இம்மலைக்கு கழுகுமலை என்ற பெயர் உண்டாயிற்று.
கோவிலின் சிறப்புக்கள்
இத்தலம் குரு மங்கள சேத்திரம் என்று போற்றப்படுகிறது. காரணம் குருவாக உமாமகேஸ்வரரும், மங்களத்தின் அதிபதியாக முருகனும் விளங்குவதால் குருமங்கள சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு முருகன் மேற்கு நோக்கி அமர்ந்த நிலையில் வீற்றிருப்பதால் ராஜபோக தளம் என்று கச்சியப்பர் பாடியுள்ளார்.
வள்ளியும் தெய்வானையும் முருகனை நோக்கி வணங்கியபடி தென்,வடலாக நின்று அருள்பாலிப்பதும் தனிச்சிறப்பு.
முருகன் இங்கு ஒரு முகத்துடனும் ஆறு கரத்துடனும் காட்சி தருகிறார்.
மேலும் இக்கோயில் குடைவரைக் கோயில் என்றாலும்கூட முருகனின் சந்நிதி வலம் வரும் விதமாக மிகவும் நேர்த்தியாக குடையப்பட்ட அற்புதமான கோயில் என்று கூறலாம்.
மேலும் மயில் இங்கு முருகனின் இடப்பக்கத்தில் இருப்பது மற்றொரு சிறப்பு. காரணம் இங்கே மயிலாக இருப்பது இந்திரன் ஆவான். ஆகவே இத்தலம் சூரசம்ஹாரத்திற்கு முன்பு தோன்றிய தலமாகும்.
ஒரே மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில் என்பது தனிச் சிறப்பு.
இக்கோவிலுக்கு மலையே விமானமாக இருப்பதால் கோபுரம் தனியே கிடையாது.
இக்கோவிலின் தெப்பத்தின் நீர் காண்பதற்கு பால்போல் தோன்றும். அதற்கு காரணமாக ஒரு கதையும் சொல்லப்படுகிறது.
அதாவது பார்வதிதேவி முருகனுக்கு சங்கினால் பாலைப் புகட்டிவிட்டு அச்சங்கினைக் கழுவியதால் இவ்வாறு பால் போன்ற நிறத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் சங்கரன்கோவிலில் உள்ள தெப்பம் பச்சை நிறமாக இருக்கும். அதற்கு காரணம் பார்வதிதேவி பச்சிலை மருந்தினை முருகனுக்கு கொடுத்துவிட்டு அந்த சங்கினைக் கழுவியதால் அங்ஙனம் பச்சையாக தோன்றுகின்றது என்று செவிவழிக் கதையாகக் கூறப்படுகிறது.
வேறு பெயர்கள்
கஜமுக பர்வதம் என்றும் அரைமலை என்றும் அழைக்கப்பட்டது.
வெட்டுவான் கோவில்
கழுகுமலை முருகன் கோவிலின் கிழக்கே சற்றேறக்குறைய 100 மீட்டர் தொலைவில் உள்ளது வெட்டுவான் கோவில். தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் மிகவும் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இக்கோயில் மலையின் மேற்பகுதியில் இருந்து 25 அடி கீழ்நோக்கியும் 40 அடி சுற்றளவுடனும் ஒரே பாறையை வெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. தென்னகத்தின் எல்லோரா என்று போற்றப்படுகின்றது. அஜந்தா எல்லோராவுக்கே இக்கோயில் மாதிரி வடிவம் ஆகும் என்றும் கருதப்படுகின்றது. மிகவும் அழகான சிற்ப வேலைபாடுகள் கண்ணைக் கவருகின்றன.
இங்கு விநாயகர் மூர்த்தியாக விளங்குகிறார். வெட்டுவான் என்றால் வெட்டுவோன் — கல்லை வெட்டுவோன் அதாவது சிற்பி என்பதே பொருளாகும். இக்கோயில் பற்றிய செவிவழிக் கதை ஒன்று கூறப்படுகின்றது.
அதுபோலவே அவனைக் காணச் செல்கிறார் அந்தச் சிற்பி. அப்போதுதான் அந்த இளைஞன் வந்திருப்பது தன்னுடைய தந்தை என்பதை அறிகிறான். தாந்தான் அவருடைய மகன் என்பதை கூறும் முன்னரே உளியால் அந்த இளைஞனின் தலையில் வெட்டவே அவன் இறக்கின்றான். அவன் இறக்கும் முன்பு அப்பா என்று அழைத்தபடியே உயிரை விடுகிறான். அப்போதுதான் அந்த சிற்பி உணர்கிறார் பெற்ற மகனையே நாம் கொன்று விட்டோம் என்று. இவ்வாறு ஒரு கதை கூறப்படுகின்றது. இந்த இளைஞன் வெட்டியதாலேயே வெட்டுவான் கோவில் என்றும், அவன் இறந்ததற்கு பின்னர் கோவில் பணி முழுமை அடையாமல் பாதியிலேயே நின்றுவிட்டது என்றும் கூறப்படுகின்றது. இப்போதும் இக்கோயில் அவ்வாறுதான் காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமணர் படுகை
வெட்டுவான் கோவிலில் இருந்து சற்று உயரத்தில் உள்ளது சமணப்பள்ளி. இங்கே சமணர்கள் தங்கியதற்கான அடையாளமாக குகைகளும், தாய், மகள், குரு, தந்தை என அவர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. இதற்கு அருகிலேயே அய்யனார், பேச்சியம்மன், செண்பகம்மன், வீரப்பன் சுவாமி போன்ற காவல் தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. இங்க குலதெய்வ வழிபாடு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றையெல்லாம் கண்டு வியந்து இரசித்து விட்டுக் கீழே இறங்கி வந்ததும் சாலையின் எதிர்த் தெருவில் ஜீவஜோதி சித்தர் ஜீவசமாதி உள்ளது. இவரை மிளகாய் பரதேசி சித்தர் என்றும் கூறுகின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு மிளகாய் வற்றல் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றது. இங்குள்ள மாணவர்கள் இந்த மிளகாய் வற்றலை தங்கள் புத்தகத்தில் வைத்துக் கொள்வார்களாம். அவ்வாறு வைத்துக்கொண்டால் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் என்பது இங்கு நம்பிக்கையாக பின்பற்றப்படுகிறது. அவரையும் தரிசித்துவிட்டு மனநிறைவுடன் களப் பயணத்தை நிறைவு செய்துகொண்டு வீடு திரும்பினோம்.

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

4 கருத்துகள்:
அருமை அம்மா 👌👌👌
அருமை அருமை அம்மா
நன்றி டா
நன்றி டா
கருத்துரையிடுக