"மஞ்சள் மஞ்சள் கொஞ்சும்
பொன்னான மலரே
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில்
தானாடும் நிலவே
மின்னல் மின்னல் கொடி
போலாடும் அழகே
கன்னல் கன்னல் மொழி
நீ பாடு குயிலே
கட்டுக்குள்ள நிற்காது
திரிந்த காளையை
கட்டி வைத்து கண்
சிரிக்கும் சுந்தரியே
அக்கரையும் இக்கரையும்
கடந்த வெள்ளத்தை
கட்டி அணை கட்டி
வைத்த பைங்கிளியே
என்னில் நீயடி
உன்னில் நானடி"
என்ற இந்த அழகான வரிகள் கவிஞர் பிறைசூடன் இயற்றிய பாடல் வரிகள். இது ஒரு தமிழ் திரைப்படத்தில் வந்த அழகான திரைப்பட பாடல். இந்த பாடலை கேட்டு ரசிக்காதவர் யாரும் இருக்க முடியாது. அவ்வளவு ரம்மியமான இசையுடன் கூடிய பாடல். இப்பாடல் அடிகளில் ஒரு அழகான சொல் ஒளிந்திருக்கிறது. அது கன்னல் மொழி என்பதாகும். அது என்ன கன்னல் மொழி? இதற்கு என்ன பொருள்? அவற்றை இங்கே காண்போம்.
கன்னல் பொருள்
கன்னல் என்றால் கரும்பு என்று பொருள் கூறுகின்றது அகராதி. அதுமட்டுமல்ல கரும்பில் இருந்து கிடைக்கக்கூடிய சாறு (கரும்புச்சாறு), அதைக் காய்ச்சி கிடைக்கக்கூடிய பாகு (மணற்பாகு), பாகு முதிர்ந்த பிறகு கிடைக்கக்கூடிய சர்க்கரை இவை அனைத்திற்குமே கன்னல் என்று பெயர் கூறுகின்றது.
மேலும் கன்னல் எனும் சொல்லுக்கு நாழிகை வட்டில், நாழிகை, ஒரு வகைச் சிறு குருவி, கரகம் என்றும் பொருள் உணர்த்தப்படுகின்றது.
இராமாயணத்தில் கன்னல்
"இன்னல் அம்பர வேந்தர்க்கு இயற்றிய
பன்னலம் பதினா லாயிரம் படை
கன்னல் மூன்றில் களப்படக் கால்வளை
வில்நலம் புகழ்ந் தேங்கி வெதும்புவாள்"
எனும் காட்சிப்படலத்து அடிகள் இராமன் காட்டில் கரன் தூடணன் முதலியோர் உள்ளிட்ட (14000) பதினாலாயிரம் படைகளை மூன்று கன்னல் நேரத்தில் வென்றான் என்று கூறுகின்றது. கன்னல் என்றால் நாழிகை என்று பொருள். (2 1/2) இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம். அதாவது 60 நிமிடங்கள். அப்படி என்றால் ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள். எனவே மூன்று கன்னல் என்பது மூன்று நாழிகை. அதாவது 72 நிமிடங்கள். அதாவது 1.12 மணி நேரம் ஆகும்.
குறுநீர்க் கன்னல்
"பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள்
தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் குறுநீர்க் கன்னல் இணைத்தென்று இசைப்ப"
எனும் முல்லைப்பாட்டு வரிகள் அக்காலத்தில் நாழிகையைக் கணக்கிட்டுக் கூறுவதற்குப் பயன்படுத்திய நாழிகை வட்டில் பற்றி குறிப்பிடுகின்றது. இதனைக் குறுநீர்க் கன்னல் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கரும்பின் வேறு பெயர்கள்
கன்னல், கழை, இக்கு, வேழம், வெகுரசம், வெண்டு, தும்பு, அங்காரிகை, ஈன், ஆலை, இக்கலம் என்று பல பெயர்களில் வழங்கப்படுகிறது.