திங்கள், 31 மே, 2021
நல்ல தமிழ்ச் சொற்கள் — 1
புதன், 26 மே, 2021
தீபாவலி தீபாவளி ஆனது எப்போது?
தீபாவளி ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது.
தீபாவளி கொண்டாடக் காரணங்கள்
திருமால் வராக அவதாரம் எடுத்தபோது பூமாதேவிக்குப் பிறந்த மகன் பவுமன் என்பவன் ஆவான். இவன் பிராக்ஜோதிசா என்னும் நாட்டை ஆண்டு வந்தான். இது இன்றைய அசாம் மாநிலம் ஆகும்.
பிரம்மனை நோக்கித் தவம் புரிந்தான் பவுமன். தவத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மன் என்ன வரம் வேண்டும் கேள் என்றார். அதற்கு மரணமே தன்னை நெருங்க கூடாது என்று வரம் கேட்டான். ஆனால் பிரம்மனோ உலகில் பிறக்கும் உயிர்கள் யாவும் ஒருநாள் இறக்க வேண்டும் என்பது நியதி என்று கூறினார். எனவே அவன் தன்னுடைய தாயால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். பிரம்மனும் அவ்வாறே வரம் அளித்தார்.
இப்படி சாகாவரம் பெற்ற அவன் அன்றுமுதல் நரகாசுரன் ஆனான். தேவர்களுக்கு மிகுந்த இம்சைகளை விளைவித்தான். அதுமட்டுமல்லாது பெண்களுக்கு மிகவும் தொல்லை அளித்து வந்தான்.
இதனால் ஆத்திரம் கொண்ட திருமால் தன்னுடைய கிருஷ்ணா அவதாரத்தில் சத்யபாமாவின் மூலமாக நரகாசுரனை அழிக்கத் திட்டமிட்டார். காரணம் கிருஷ்ண அவதாரத்தின் போது பூமாதேவியே சத்தியபாமாவாக அவதரித்தாள். சத்யபாமாவின் மூலம் நரகாசுரன் அழிக்கப்பட்டான். நரகாசுரன் வதைக்கப்பட்ட அன்று தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த காரணத்தினால், அன்றைய தினம் உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று திருமாலிடம் வரம் கேட்டான் நரகாசுரன். அதன் பொருட்டு தீபாவளி கொண்டாடப் படுகிறது என்று புராணம் கூறுகின்றது.
இது ஒருபுறம் இருக்க,
இராமாயண காலத்தில், இராவணனுடன் போர் புரிந்து ராமன் சீதையை மீட்டு, அயோத்தி திரும்பி வரும் அந்த நாளில், அயோத்தி மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் விளக்கேற்றி இராமனை வரவேற்றதாகக் கூறப்படுகின்றது. அதன் பொருட்டு அன்றிலிருந்து அந்நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
அதுமட்டுமல்ல,
கந்த புராணத்தின் படி சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். அங்ஙனம் சக்தியைத் தன்னுள் பாதியாக ஏற்றுக் கொண்டதும், சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக உருவம் பெற்றதும் இந்த தினத்தில்தான் என்று கூறுகின்றது கந்தபுராணம். அன்றுமுதல் அன்றைய தினம் தீபாவளியாக கொண்டாடப் படுகின்றது என்றும் கருத்து நிலவுகின்றது.
ஆனால் இவற்றுக்கெல்லாம் மாறாக ஓர் உண்மை
சமணர்களின் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரத்திலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையில் தங்கியிருந்த போது அங்குக் குழுமியிருந்த மக்களுக்கு அறவுரை செய்தார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் நிறைவுபெற்றது. அதனால் அனைவரும் கேட்டுக்கொண்டிருந்த படியே தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர். வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே வீடுபேறு அடைந்தார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் வீடுபேறு அடைந்திருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு கலந்து ஆலோசனை செய்து, உலகத்திற்கு ஞான ஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் வீடுபேறு பெற்ற நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா தீபாவலி என்னும் பெயரால் கொண்டாடப்படுகின்றது.(தீபாவலி = தீபம் + ஆவலி. தீபம் என்றால் விளக்கு ஆவலி என்றால் வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்த படியால் தீபாவளி விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதல்லவா. (சமணமும் தமிழும் — மயிலை சீனி. வேங்கடசாமி)
சிந்திக்க வேண்டியது,
நரகாசுரன் உடன் நிகழ்ந்த போர் இரவு முழுவதும் நடந்து விடியற்காலையில் நரகாசுரன் கொல்லப்பட்டான் என்று புராணம் கூறுகின்றது. ஆனால் யுத்த தர்மப்படி இரவில் போர் நிகழ்த்தக் கூடாது என்பது யாவரும் அறிந்ததே. சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரையில் மட்டுமே போர் நிகழும். மீண்டும் மறுநாள் சூரிய உதயத்தின் போது தான் போர் துவங்கும். ஆனால் நரகாசுரன் வதம் அல்லது நரகாசுரனுடன் நிகழ்ந்த போர் இரவில் நிகழ்ந்ததாகப் புராணம் கூறுகின்றது. இதிலிருந்து இப் புராணக்கதை புனையப்பட்டு இருக்கிறது என்பதை நாம் உணர முடியும்.
சமணர்களின் பல்வேறு வழக்கங்கள் இன்று இந்துக்களிடமும் இருக்கிறது. இதற்கு காரணம், சமண சமயத்தின் வீழ்ச்சிக்குப் பின் சமணர்கள் பலர் இந்துக்களாக மாறினர் என்பதே.
திங்கள், 24 மே, 2021
திருவள்ளுவர் யார்?
திருவள்ளுவர் யார்? எனும் கேள்வியே இன்று தலைப்பாகி நிற்கிறது. காரணம் வள்ளுவர் இயற்றிய குறளில் சமண சமயக் கொள்கைகளும், தத்துவங்களும் ததும்பக் காணலாம். ஆயினும் திருக்குறள் சமணசமய நூல் என்று உறுதியாகக் குறிப்பிடப்படவில்லை. ஏன்?
அதேபோல் வள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்றும் தீர்க்கமாகக் குறிப்பிடப்படவில்லை. மாறாக சைவர்கள் திருவள்ளுவ நாயனார் என்று கூறி வள்ளுவரைச் சைவர் என்று குறிப்பிடுகின்றனர். இதை ஏற்கலாமா?
மேற்கண்ட வினாக்களுக்கு விடை காண விரும்பியே இம்முயற்சி..
சமணசமயக் கொள்கைகள் உணர்த்துவது என்ன?
(சமணசமயக் கொள்கைகளில் முதலில் துறவற ஒழுக்கங்கள் குறித்து காண்போம்.)
துறவற ஒழுக்கங்கள்
சமணர்கள் தங்கள் வாழ்வை இல்லறம் துறவறம் என்று இரண்டாக வகுக்கின்றனர். அதில் துறவற ஒழுக்கங்கள் மொத்தம் 28 ஆகும். அவை 1. மா விரதங்கள் ஐந்து 2. சமிதி ஐந்து 3. ஐம்பொறி அடக்கம் ஐந்து 4. ஆவஸ்யகம் ஆறு 5. லோசம், திகம்பரம், நீராடாமை, பல் தேய்க்காமை, தரையில் படுத்தல், நின்று உண்ணல், ஒருவேளை உண்ணல் என மொத்தம் 28 ஒழுக்கங்கள் துறவறத்திற்கு உரியது என்று சமண சமயம் வகுத்துள்ளது.
1. மாவிரதங்கள் என்பன அகிம்சை, வாய்மை, கள்ளாமை, துறவு, அவா அறுத்தல் என்பனவாகும். (5)
2. சமிதிகள் என்பன இரியை, பாஷை, ஏஷாணை, ஆதான நிக்ஷேபனை, உத்சர்க்கம் என்பனவாகும். (5)
3. ஐம்பொறி அடக்கம் என்பன மெய் வாய் கண் காது மூக்கு ஆகியனவாகும். (5)
4. ஆவஸ்யகம் என்பன சமாயிகம், துதி, வணக்கம், பிரதிகிர்மணம், கழுவாய், விசர்க்கம் என்பனவாகும். (6) இவற்றுடன் லோசம், திகம்பரம், நீராடாமை, பல் தேய்க்காமை, தரையில் படுத்தல், நின்று உண்ணல், ஒருவேளை உண்ணல் (7) சேர்த்து மொத்தம் 28 ஒழுக்கங்கள் ஆகும்.
விளக்கமாகக் காண்போம்..
1. அகிம்சை
சமணர்கள் துறவறம் மேற்கொள்ள இருப்பார்களே ஆனால் அவர்கள் பின்பற்றக்கூடிய 28 ஒழுக்கங்களில் முதலாவதாக கருதப்படுவது அகிம்சை என்னும் ஒழுக்கமாகும்.
இந்த அகிம்சை என்னும் முதல் ஒழுக்கத்தில் சமணர்கள் பின்பற்றக்கூடிய கூறுகள் என்னென்ன தெரியுமா?
இன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய நான்கும் சேர்ந்ததே அகிம்சை என்று கூறுகின்றது சமண சமய ஒழுக்கம்.
அதாவது சமணர்கள் துறவறம் மேற் கொள்ளப்படும் பொழுது பிற உயிர்களுக்கு துன்பம் செய்யக்கூடாது. பிற உயிர்களிடத்து அருளுடைமை கொண்டவராக அதாவது கருணை உள்ளம் கொண்டவராக விளங்க வேண்டும். பிற உயிர்களைக் கொல்லக்கூடாது. அதுபோல அவர்கள் புலால் உணவு உண்ணக்கூடாது. இந்த நான்கும் சேர்ந்தது தான் அகிம்சை என்ற ஒரு ஒழுக்கத்தை குறிக்கின்றது.
இங்கே உங்களுக்கு ஓர் ஐயம் நிச்சயமாக ஏற்படும். அது என்ன?
இந்த ஒழுக்கக் கூறுகள் அனைத்தும் திருக்குறளில் அதிகாரங்களாகக் காணப்படுகின்றன என்பது தான். திருவள்ளுவர் தன்னுடைய அதிகாரங்களுக்கு வைத்த பெயர்கள் அனைத்தும் இங்கே சமண சமயத்தவர் துறவறம் மேற்கொள்ளப்படும் பொழுது பின்பற்றக்கூடிய ஒழுக்கக் கூறுகளாக அமைகின்றன என்பது மிகப் பொருத்தமான சான்றாக அமைகின்றது.
2. வாய்மை
வாய்மை என்னும் இரண்டாவது ஒழுக்கத்திற்கு இளம்பூரணர் ஒரு விளக்கம் தருகிறார். அது என்னவென்றால், பொய்யாமையானது தீமை பயக்கும் சொற்களைக் கூறாமை என்று கூறுகிறார்.
அதாவது ஒருவர் ஒரு உயிரைக் கொல்ல துணிவாராயின் அவ்வமயம் பொய் சொல்லியாகிலும் கொலையிலிருந்து அவ்உயிரைக் காப்பாற்ற வேண்டியது சமணரின் கடமையாகும் என்று சமண சமய ஒழுக்கம் உரைக்கின்றது.
இங்கும் உங்களுக்கு ஓர் உண்மை புலப்படும். "பொய்மையும் வாய்மை இடத்து" எப்போது? "புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்" என்று வள்ளுவர் வாய்மைக்கு வகுத்த எல்லையை உணர்த்தும் குறள் உங்களுக்கு கண்முன்னே காட்சி அளிக்கும்.
3. கள்ளாமை
இங்கே கள்ளாமை என்பது களவு என்று பொருள் உணர்த்துகிறது.
எவ்வளவு அற்பமான பொருளாக இருந்தாலும் அதனை அதற்குரியவர் கொடுத்தால் அன்றி, எடுத்துக் கொள்ள நினையாது இருத்தல் ஆகும் என்று விளக்கம் தருகிறது சமண சமய ஒழுக்கம்.
இவ்ஒழுக்கமும் துறவறவியலில் வள்ளுவர் 29வது அதிகாரமாக படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சான்றாக:
"களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்" — 283.
4. துறவு
துறவு என்பது சிற்றின்பத்தை மனம் வாக்கு காயங்களால் செய்யாதிருத்தல் என்று கூறுகின்றது சமண சமயம் ஒழுக்கம். அதாவது தெய்வங்களுடனாவது, மனிதர்களுட -னாவது, விலங்குகளுடனாவது இணை விழைச்சாகிய சிற்றின்பத்தைத் துய்க்க மாட்டேன் என்றும்; இதனை மனம், மொழி, மெய்களால் முக்காலத்திலும் செய்யாதிருத்தல் அவசியம் என்றும் கூறுகின்றது சமண சமயம் ஒழுக்கம்.
இத்துறவு குறித்தும் வள்ளுவர் துறவறவியலில் 35வது அதிகாரமாகப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
5. அவா அறுத்தல்
அவா அறுத்தல் என்பதற்கு முற்றத் துறத்தல் என்று பொருள். அதாவது தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல் என்று இளம்பூரணர் பொருள் உரைக்கின்றார்.
இதனை வள்ளுவர் துறவறவியலில் 37வது அதிகாரமாக வகுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
6. இரியை
இரியை என்றால் இரியாசமிதி என்று பொருள்படும். அதாவது சமணத் துறவி நடக்கும் போது தரையை மூன்று முழ தூரம் முன்னால் பார்த்து புழு பூச்சிகள் இருந்தால் அவற்றை மிதிக்காமல் நடத்தல் வேண்டும் என்று உணர்த்துகின்றது.
அதனால்தான் சமணத்துறவிகள் மயிற்பீலி குஞ்சத்தை எப்பொழுதும் தங்கள் கையில் வைத்துக்கொண்டு விசிறியபடி நடப்பர் என்று குறிப்பிடுகின்றனர்.
"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சாலை மிகுத்து பெயின்" — எனும் குறளில் வள்ளுவர் ஏன் மயிற்பீலியை சுட்டியுள்ளார் என்பது சிந்திக்கத்தக்கது. அவர் இவ்விடத்தில் ஒரு சிறு பறவையின் இறகைக் கூறி இருக்கலாம். ஆனால் மயிற்பீலியை இங்கே சுற்றுவதற்கு காரணம், அவர் ஒரு சமணர் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
7. பாஷாசமிதி
பாஷா சமிதி என்பதற்கு நாவடக்கம் அல்லது வாக்கடக்கம் என்று பொருள் உணர்த்துகின்றது.
நாவடக்கம் என்பதற்கு பழித்துப் பேசுதல், புகழ்ந்து பேசுதல், கோபமாக பேசுதல், கடுஞ்சொல் கூறல் முதலிய பேச்சுக்களை நீக்கி இனிமையாகப் பேசுவதையும் தர்மஒழுக்கம் சமயக்கொள்கை இவற்றை போதிப்பதையும் சமணத்துறவி தன் கொள்கையாக போற்றுவதே பாஷா சமிதி என்கின்றது சமணசமய ஒழுக்கம்.
அடக்கம் பற்றி வள்ளுவனும் நாவடக்கம், அவையடக்கம், புலனடக்கம் என்பனவாக பகர்ந்துள்ளான் என்பது குறிப்பிடத் -தக்கது.
8. ஏஷணாசமிதி
ஏஷணாசமிதி என்பது உண்ணும் உணவில் 46 வகை குற்றங்கள் இல்லாத உணவினை யாசித்துப் பெற்று அளவாக உண்ணுதல் ஆகும் என்று சமணசமய ஒழுக்கம் கூறுகின்றது. [46 வகை குற்றங்களை சமண சமய நூலில் காண்க.]
இதற்கும் வள்ளுவர் நட்பியலில் 95வது அதிகாரத்தில் 942, 943, 944, 945 ஆகிய குறட்பாக்களில் ஒரு மனிதன் எப்படி உண்ண வேண்டும், எந்த அளவு உண்ண வேண்டும், என்ன மாதிரியான உணவுகளை உண்ணவேண்டும் என்று விளக்கியுள்ளார்.
9. ஆதான நிக்ஷேபனாசமிதி
துறவறம் மேற்கொள்ளும் சமணர்கள் தங்கள் நூல் (புத்தகம்), குஞ்சம் (மயிற்பீலி), கமண்டலம் போன்றவற்றை மெதுவாக எடுத்து வைக்க வேண்டும் என்று கூறுகின்றது. அதாவது பிற சிறு உயிர்களைக் கூடத் துன்புறுத்தக் கூடாது என்பது கருத்தாகிறது.
10. உத்சர்க்க சமிதி
துறவறம் மேற்கொள்ளும் சமணர்கள் மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ஊருக்கு வெளியே யாரும் அண்டாத இடத்தில் கழிக்க வேண்டும். அதனால் கூட பிற உயிர்களுக்குத் துன்பம் நேரக் கூடாது என்கிறது சமணசமய ஒழுக்கம்.
11. ஐம்பொறியடக்கம்
ஐம்பொறியடக்கம் என்பது 11. மெய், 12. வாய், 13. கண், 14. காது, 15. மூக்கு ஆகிய ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டும் என்று உணர்த்துகின்றது. இதனையும் வள்ளுவர் அடக்கமுடைமை அதிகாரத்தில் புலனடக்கமாக உணர்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
16. சமாயிகம்
சமாயிகம் என்றால் சமமாகப் பார்த்தல் என்பது பொருள். வள்ளுவனும் இதனை நடுவுநிலைமை என்னும் அதிகாரத்தில் உரைத்துள்ளான் என்பது நினைவு கூறத்தக்கது.
17. துதி
துறவு மேற்கொள்ளும் சமணர்கள் 24 தீர்த்தங்கரர்களையும் அருகனையும் மனத்தால் துதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
இதனை வள்ளுவர் கடவுள் வாழ்த்து என்னும் முதல் அதிகாரமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
18. வணக்கம்
துறவறம் மேற்கொள்ளும் சமணர்கள் இறைவன், சித்தர், தீர்த்தங்கரர், பெரியோர்கள் ஆகியோரை வாக்காலும் உடலாலும் வணங்குதல் வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றது.
19. பிரதிகிர்மணம்
சமணர்கள் துறவறம் மேற்கொள்ளும் பொழுது பாவத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்ளல் அதாவது பாவச் செயல்கள் எதுவும் செய்யாது தற்காத்தல் என்பதை குறிப்பிடும் விதமாக அமைகின்றது.
இதனை வள்ளுவனும்
"பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவன் அடி சேராதார்" என்று குறிப்பிட்டிருப்பார்.
20. கழுவாய்
சமணத்துறவிகள் தன் கொள்கைப் பிடியில் தவறிழைத்தால் வருந்தி குற்றத்தை எண்ணித் திருந்துதல் வேண்டும். கழுவுதல் என்றால் திருந்துதல் என்று பொருள்.
21. விசர்க்கம்
தவம் செய்யும்பது வரும் துன்பங்களை எண்ணி அஞ்சாமல் பொறுமை காத்தல் வேண்டும். உடலின் மீது பற்று அறுக்கும் நிலைமைக்கு விசர்க்கம் என்று பெயர்.
இங்ஙனம் பொறுமையாக இருப்பதை வள்ளுவர் பொறையுடைமை அதிகாரத்தில் வகுத்துள்ளார்.
22. லோசம் என்றால் மயிர் களைதல்
23. திவாகரம் என்றால் நிர்வாணமாக இருத்தல்.
24. நீராடாமை என்றால் உடலின் மீது பற்று விட்ட பின் அதனை அழகுபடுத்தும் எண்ணத்தையும் நினைவாய்.
25. தரையிற் படுத்தல் என்றால் உடலின் மீது பற்று அற்று விட்ட பின் அந்த உடலின் மீது ஏதேனும் குத்திவிடுமோ என்ற கவலையும் இன்றி தரையில் படுத்தல் ஆகும்.
26. பல் தேய்க்காமை என்றால் உடம்பையும் துறந்த பின் பற்களைத் தேய்த்து சுத்தம் செய்யும் எண்ணத்தை நினையார்.
27. ஏகபுக்தம் என்றால் துறவறம் மேற் கொள்ளும் சமணர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும் என்ற கொள்கையை கடைப்பிடித்தல் ஆகும்.
28. நின்று உண்ணல் என்பது உணவினை நின்றுகொண்டு உண்பதைக் குறிக்கும்.
இந்த 28 ஒழுக்கங்களைச் சரிவர கடைப்பிடிப்பவர்கள் தான் துறவறம் மேற்கொள்ளும் சமணத் துறவியாக ஏற்றுக்கொள்ளப்படுவர். அல்லது துறவறம் மேற்கொள்ளும் சமணத்துறவிகள் கண்டிப்பாக இந்த 28 ஒழுக்கங்களையும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதை சமணர்கள் மிகவும் வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட சமணசமய ஒழுக்கங்களில் பெரும்பாலானவை கிட்டத்தட்ட 99 சதவீத கொள்கைகள் அனைத்துமே வள்ளுவரால் திருக்குறளில் பின்பற்றப்பட்டுள்ளது என்பதை நாம் கண்கூடாகக் காண முடிகின்றது.
மேலும் திருவள்ளுவர் இல்லறம் போற்றியவர் என்பதும் நாம் அறிந்ததே. செவி வழிக் கதையாக வள்ளுவன் வாசுகியின் இல்லற வாழ்க்கையை கேட்டறிந்துள்ளோம். சமண சமயத்தவர்களில் இல்லறம் போற்றுவோரும் உண்டு. துறவறம் போற்றுவோரும் உண்டு என்பது நாம் முதலிலேயே குறிப்பிட்டிருந்தோம்.
அவ்வகையில் வள்ளுவர் வாசுகி என்னும் தன் மனைவியுடன் இல்லற வாழ்வை மேற்கொண்டவர் என்பதும் நமக்கு இங்கே வள்ளுவர் சமணர் என்பதை உணர்த்தாமல் உணர்த்துகின்றது.
அதுமட்டுமல்லாது வள்ளுவருக்கு ஓவியம் தீட்ட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் முதன்முறையாக பாரதிதாசன் அந்த முயற்சியை மேற்கொள்கின்றார். பாரதிதாசனுக்கு உறுதுணையாக திராவிட கழகத்தைச் சேர்ந்த இராம செல்வன் என்பவரும் உடன் இருக்கின்றார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஓவியர் வேணுகோபால் சர்மாவை அணுகுகின்றனர் வேணுகோபால் சர்மாவும் திருவள்ளுவர் திருவுருவத்தை வரைந்து முடிக்க, அதனை அறிஞர் அண்ணா 1960இல் காங்கிரஸ் மைதானத்தில் அறிமுகப்படுத்தினார் என்பது இன்றியமையாதது. திருவள்ளுவரின் ஓவியத்தில் அவருடைய ஆடை வெண்ணிற ஆடையாக வரையக் காரணம், சமணர்கள் வெண்ணிற ஆடை உடுத்துபவர்கள் என்பதே ஆகும்.
மேலும் திருவள்ளுவர் மயிலாப்பூரில் வசித்தார் என்ற கருத்தையும் உற்று நோக்கல் அவசியமாகும். ஏனென்றால் மயிலாப்பூரில் இன்றளவும் சமணர்கள் வாழ்ந்து வரும் பகுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட இத்தனை சான்றுகளும், காரணங்களும் திருவள்ளுவர் ஒரு சமணர் என்பதை 100 சதவிகிதம் நமக்கு புலப்படுத்துகின்றது. ஆயினும் இன்னும் திருவள்ளுவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர் என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாத ஒன்றாக, ஆய்வுப் பொருளாக மட்டுமே இருப்பதென்பது வருத்தமளிப்பதாகவே உள்ளது.
இன்னும் தொடரும்...
வெள்ளி, 21 மே, 2021
கும்மி குளிரச் செய்த மாதரசி
[கும்மி என்றால் வயிறு என்று பொருள்]
சென்ற பதிவின் தொடர்ச்சி..
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தாண்டவம் ஆடிய தாது பஞ்சத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை முன்னர்க் கண்டோம். ஆனால் மதுரை நகரைப் பொறுத்த மட்டில் பசிப்பிணியைப் போக்க வந்தாள் ஒரு மணிமேகலை. அவள் "குஞ்சரம்' என்ற பெயர்கொண்டு விளங்கினார்.
அழகே உருவவானவள் குஞ்சரம்
குஞ்சரம் தேவரடியார் வழிவந்த பெண் என்று வரலாறு கூறுகிறது. அவள் அழகே உருவான மங்கை என்று சொல்லி தெரிய அவசியம் இல்லை. புகைப்படமே அதற்கு சாட்சி. உடல் முழுக்க தங்கம் பவளம் வைரம் முத்து நகைகள் அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்குமாம்.
ஆயிரம் கண்கள்
குஞ்சரம் கோயிலுக்கு செல்லும்போது அவள் நடை, உடை, நகை, கூந்தல் அழகினைக் காண ரசிக்க ஆயிரம் கண்கள் காத்திருக்குமாம்.
குஞ்சரத்தின் சொத்துக்கள்
மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் இரண்டு மாளிகைகள் குஞ்சரத்திற்குச் சொந்தமாக இருந்தது. அவர், தேவரடியார் ஆனதால் ஆடலும் பாடலும் எப்போதும் அந்த மாளிகைகளில் ஆட்சி செய்யும் என்று கூறப்படுகிறது. எல்லா நாட்களும் விருந்து தடபுடல்தான். மாளிகைக்கு பெரும் செல்வந்தர்களின் வருகை குஞ்சரத்தின் முக்கியத்துவத்தையும் பிரபலத்தையும், குவியும் செல்வத்தையும் சுட்டிக் காட்டும் வகையில் அமைந்தன.
குஞ்சரத்தின் தாயுள்ளம்
குஞ்சரம் கோயில் வேலைகளை செய்து வந்ததினால் பஞ்சம் பற்றி இம்மி அளவு கூட கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால் "சாதாரண மக்கள் பஞ்சத்தினால் ஒன்றும் கிடைக்காமல் ஒட்டி உலர்ந்து ஒருவர் சாவதை ஒருவர் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் நீ சாவதை நான் பார்க்கணுமா.. இல்லை நான் சாவதை நீ பார்க்கிறாயா' என்று கணவன்- மனைவி, பெற்றோர் - பிள்ளைகள் பேச, கேட்கக் கூட சக்தியில்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்த நிலையிலேயே மடிந்து போகிறார்கள்' என்ற செய்தி குஞ்சரத்தின் செவிகளில் இடிபோல் இறங்கின. இறைவனுக்குத் தொண்டு செய்த உள்ளம் அல்லவா! அவளின் கடலலை போல் பொங்கிப் பிரவாகம் எடுத்தது.
பசிப்பிணி போக்கினாள்
பஞ்சத்தில் அடிபட்டு மக்கள் செத்து மடிவதிலிருந்து காக்க, பசியால் தவிப்பவர்களுக்கு ஒரு வேளை கஞ்சியாவது வழங்கத் தீர்மானித்தாள்.
பெரிய வட்டையில் (தேக்சா, டவரா என்று இன்று வழங்குகிறோம்) கஞ்சி காய்ச்சி வழங்க ஆரம்பித்தாள். சில நாட்கள் நகர்ந்தன. "குஞ்சரம் வடக்கு ஆவணி மூல வீதியில் பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு கஞ்சி வழங்குகிறாள்' என்ற செய்தி மதுரை சுற்றுவட்டாரத்தில் காட்டுத் தீயாகப் பரவியது.
நடக்க வலுவில்லாதவர்கள் கூட உயிரைப் பிடித்துக் கொண்டு நகர்ந்து தவழ்ந்து வர ஆரம்பித்தனர். மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. ஒரு வட்டை கஞ்சி வழங்கி வந்த குஞ்சரம், இரண்டு வட்டை கஞ்சி காய்ச்சி வழங்கினார். சில நாட்களில் அது மூன்று வட்டையானது. அப்படி என்றால் தமிழகத்தில் எந்த அளவு பஞ்சம் பீடித்திருக்கக்கூடும். நீங்கள் முடிவுசெய்து கொள்ளுங்கள்.
திரும்பிப் பார்த்தனர்
இந்த கஞ்சி வழங்கல் செய்தியைக் கேட்ட மதுரை ஆட்சியரான ஜார்ஜ் பிராக்டர் ஆச்சரியப்பட்டுப் போனார். "ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை குஞ்சரம் செய்கிறாளே' என்று வியந்தார்.
"நாமும் ஏதாவது செய்ய வேண்டும்... இல்லையென்றால் நம்மை இழிவாகப் பேசுவார்கள்.. நாளைய சரித்திரத்திலும் பஞ்ச காலத்திலும் ஒன்றும் செய்யவில்லை என்று இகழ்ச்சியாகப் பதிவு செய்வார்கள்' என்று நினைத்து மூன்று கஞ்சித் தொட்டிகளை திறந்தார்.
ஆட்சியரின் கஞ்சி தொட்டிகளில் கஞ்சி குடித்தவர்களை மதுரையிலிருந்து பல ஊர்களுக்கும் செல்ல ரயில்பாதை அமைக்கும் வேலைகளில் ஈடுபடுத்தினார். அரசாங்க கஞ்சித் தொட்டிகள் வந்ததினால் குஞ்சரம் வழங்கும் கஞ்சியை வாங்க வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்தாலும் மொத்தமாக நின்றுவிடவில்லை.
கோபுரகலசம் குடிசையில்
நாட்கள் நகர நகர கஞ்சி காய்ச்ச பணம் இல்லாது வந்த போது உச்சி முதல் பாதம் வரை அணிந்திருந்த நகைகளை விற்று கஞ்சி ஊற்றினாள் குஞ்சம். இடையிடையே சமையல்காரர்கள் வராமல் இருந்துவிடுவார்களாம். குஞ்சரம் சிரமம் பார்க்காமல் அவரே கஞ்சி காய்ச்சுவாரம். பஞ்சம் தொடர்ந்ததால் கஞ்சி வழங்குவதைத் தொடர, ஓட்டு வீட்டிற்கு மாறி, தனது இரண்டு மாளிகைகளையும் விற்றார். அந்தப் பணத்தில் இடைவெளி விடாமல் பதிமூன்று மாதங்கள் கஞ்சி வழங்கி வந்தார். இப்படி ஒரு ஆண்டு முழுவதும் கஞ்சி சலிக்காமல் ஊற்றி வந்த குஞ்சரம் நோய் வந்து இறந்தார் என்று மதுரை வரலாறு நம் கண்களை விரிவடையச் செய்து வியப்பில் ஆழ்த்திச் செல்கிறது.
உப்பிட்டவரை
"உப்பிட்டவரை உள்ளளவும் நினை" என்பார்களே, குஞ்சரத்தின் இறுதிச் சடங்கில் அவர் ஊற்றிய கஞ்சி குடித்ததனால் உயிர் பிழைத்த அனைவரும் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினார்களாம். அஞ்சலி செலுத்த வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்துவிட்டு அன்றைய வெள்ளைக்கார ஆட்சியர் ஜார்ஜ் பிராக்டர் "கோயில் திருவிழாவுக்குத்தான் மதுரையில் இப்படி மக்கள் கூடுவார்கள். பெண் ஒருவர் இறந்ததற்கு மக்கள் இப்படி கூடியதை முதல் முறையாக பார்க்கிறேன்..' என்று பதிவு செய்தாராம்..! என்று வரலாறு கூறுகிறது.
அந்த நிலை இந்த 2021இல் மீண்டும் வந்து விடக் கூடாது என்று அனைவரும் கைதொழுவோம். 🙏
கொரோனாவை ஒழிக்க முகக் கவசம் அணிவோம்! தனிநபர் இடைவெளி கடைப்பிடிப்போம்! தேவையின்றி வெளியே சுற்றுவதைத் தவிர்ப்போம்!
வியாழன், 20 மே, 2021
தமிழகமும் தாது வருடப் பஞ்சமும்
பஞ்சகாலம்
தமிழகத்தில் பல்வேறு பஞ்சங்கள் தோன்றியுள்ளன. அவற்றில் முக்கியமானது 1876ஆம் ஆண்டின் தாது வருடப் பஞ்சம். இன்னொரு பஞ்சம் 1896ல் தமிழகத்தைத் தாக்கியது. இந்த பஞ்சங்களுக்கு முக்கிய காரணம் ஆங்கிலேயர்களின் அடக்குமுறை கொண்ட ஆட்சி முறையே என்று வரலாறு கூறுகிறது.
தமிழகத்தைத் தாக்கிய பஞ்சங்கள்
பஞ்சம் ஏற்படக் காரணங்கள்
மக்களின் அவலநிலை
கொத்தடிமைகள் உருவாக்கம்
பஞ்சத்தால் மாண்டவர்கள்
சாது மிரண்டால்
பஞ்சக்குழுமம்
பஞ்சத்தின் எச்சங்களாய்..
சாப்பிட்டாச்சா?
புதன், 19 மே, 2021
துணை எழுத்துக்கள்
தமிழ் மொழி எழுத்துக்களின் வரிவடிவங்கள் குறித்து சென்ற கட்டுரையில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக...,
தமிழ் எழுத்துருக்களை குறில் நெடில் என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் குறில் எழுத்துக்கள் என்றாலும், நெடில் எழுத்துக்கள் என்றாலும் அவை ஒவ்வொன்றும் தத்தம் ஒலிக்குறிப்புக்கு ஏற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துருவைப் பெற்று அமைகின்றன என்பதை நாம் முன்னர் கண்டோம்.
தமிழ் மொழியின் ஒவ்வொரு ஒலிக்குறிப்புக்கும் ஏற்றவாறு எழுத்துரு கொடுக்க பல துணை எழுத்துக்கள் உடனிற்கின்றன. அத்தகைய துணை எழுத்துக்களின் பெயர்கள் நமக்கு தெரியுமா?
நமக்குத் தெரிந்த துணை எழுத்தின் பெயர் துணைக்கால், ஒற்றைக் கொம்பு மற்றும் இரட்டைக் கொம்பு அவ்வளவே.
நம் முன்னோர்கள் தமிழ் மொழியின் எழுத்துக்கள் அனைத்திற்கும் பெயரிட்டு வழங்கியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளவே இக்கட்டுரை.
துணையெழுத்துக்களின் பெயர்கள்
கீழ்ப்பிறை, துணைக்கால், ஒற்றைக் கொம்பு, கொம்புக்கால், இரட்டைக் கொம்பு, இணைக்கொம்பு, சாய்வுக்கீற்று, இறங்குக்கீற்று, பின்வளைக்கீற்று, மடக்கேறுகீற்று, மடக்கேறு கீற்றுக்கால், மேல் விலங்கு, கீழ் விலங்கு, மேல் விலங்குச்சுழி, கீழ் விலங்குச்சுழி, இறங்கு கீற்றுகீழ் விலங்குச்சுழி என்பனவாம்.
துணை எழுத்தைப் பெறும் எழுத்துக்கள்
கீழ்ப்பிறை — ஆ எனும் எழுத்தில் கீழ் நோக்கி இழுக்கப்படும் வளைவிற்கு உரிய பெயர். இதற்கு பிறைச் சுழி என்றும் பெயர் உண்டு.
துணைக்கால் — கா, கொ, கோ போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.
ஒற்றைக் கொம்பு — செ, தெ, கொ, பௌ போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.
கொம்புக்கால் — ஊ பௌ போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.
இரட்டைக் கொம்பு — கே, மே, லோ, போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது. இதற்கு கொம்புச்சுழி என்ற பெயர் உண்டு.
இணைக்கொம்பு — கை, பை, டை போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது. இதற்கு சங்கிலிக் கொம்பு, ஐகாரக் கொம்பு என்றும் பெயர் உண்டு.
சாய்வுக்கீற்று — ஏ எனும் எழுத்தின் கீழே சாய்த்து இழுப்பதால் இப்பெயர் பெற்றது.
இறங்குக்கீற்று — ஙு, சு, பு, யு, வு, போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.
பின்வளைக்கீற்று — கூ எனும் எழுத்தை எழுதப் பயன்படுகிறது.
மடக்கேறுகீற்று — ணு, து, நு, று, னு, போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.
மடக்கேறு கீற்றுக்கால் — ணூ தூ நூ றூ போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.
மேல் விலங்கு — கி, சி, நி, மி போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.
கீழ் விலங்கு — மு, ரு, ழு போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.
மேல் விலங்குச்சுழி — கீ, சீ, ணீ, வீ போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.
கீழ் விலங்குச்சுழி — மூ, ழூ போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.
இறங்கு கீற்றுகீழ் விலங்குச்சுழி — பூ, யூ, வூ போன்ற எழுத்துக்களை எழுதப் பயன்படுகிறது.
இத்துணை எழுத்துக்களின் பெயர்களை இனியேனும் நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம். மறவாமல் சொல்லிக் கொடுப்போம்.
செவ்வாய், 18 மே, 2021
கதை சொல்லி கி.ரா
கி. ரா எனும் கி.ராஜநாராயணன் (செப்டம்பர் 16, 1923 – மே 17, 2021)
தமிழ் எழுத்துலகில் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர் கி.ரா. இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
முழுப்பெயர்
கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர் என்பதாகும்.
பெற்றோர்
இவரின் தந்தை ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம் ஆவார். தாய் லட்சுமி அம்மாள் ஆவார். இத் தம்பதியருக்கு ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார்.
முதல் கதை
1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டும் கண்ணாடியாக வெளிப்பட ஆரம்பித்தது.
கி.ரா.தன்னைப்பற்றிக் கூறுகையில்,
கி.ரா. தான் இயல்பில் ஒரு விவசாயி என்றும்; ஒரு தேர்ந்த கதை சொல்லியாக விளங்கிய இவர், ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறுகிறார்.
பணி
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர் கி.ரா. நல்ல இசை ஞானம் கொண்டவர் ஆவார்.
அகராதிப்பணி
கரிசல் வட்டார மக்களின் பேச்சு மொழிச் சொற்கள் அனைத்தையும் ஒருங்கு திரட்டி, கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடியும் இவரே ஆவார்.
பெற்ற விருதுகள்
🌷சாகித்ய அகாடமி விருது🌷இலக்கிய சிந்தனை விருது🌷தமிழக அரசின் விருது🌷கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது🌷2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது. இவ்வாறு பல விருதுகளைப் பெற்றுள்ளார் கி.ரா.
படைப்புகள்
சிறுகதைகள்
கன்னிமை, மின்னல், கோமதி, நிலை நிறுத்தல், கதவு(1965), பேதை, ஜீவன், நெருப்பு (புதினம்), விளைவு, பாரதமாதா, கண்ணீர், வேட்டி, கரிசல்கதைகள், கி.ரா-பக்கங்கள், கிராமிய விளையாட்டுகள், கிராமியக்கதைகள், குழந்தைப்பருவக் கதைகள், கொத்தைபருத்தி, புதுவை வட்டார நாட்டுப்புறக்கதைகள், பெண்கதைகள், பெண்மணம், வயது வந்தவர்களுக்கு மட்டும், கதை சொல்லி (2017)
குறுநாவல்
கிடை, பிஞ்சுகள்
நாவல்
கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாடமி விருது பெற்றது), அந்தமான் நாயக்கர்
கட்டுரை
ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?, புதுமைப்பித்தன், மாமலை ஜீவா, இசை மகா சமுத்திரம், அழிந்து போன நந்தவனங்கள், கரிசல் காட்டுக் கடுதாசி
தொகுதி
நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
திரைப்படமாக ஆக்கப்பட்ட இவர் எழுத்துக்கள்
ஒருத்தி
(கிடை என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு அம்சன் குமார் இயக்கிய திரைப்படம்)
சகாப்த நிறைவு
2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 97ஆம் வயதில் இயற்கை எய்தினார்.
கடைசிப் பதிவும் எழுத்தும்
கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று சூழலில், பெண்களைப் பற்றிய "அண்டரண்டப்பட்சி" என புத்தகத்தை தன் கைப்பட எழுதியுள்ளார். இதை அச்சில் பதிக்காமல், கைப்பிரதியாகவே வாசகர்கள் படிக்க வேண்டும் என விரும்பி எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சாதி குறித்த "சாவஞ்செத்த சாதிகள்" என்று கதையினையும், தான் எழுதாமல் விட்ட கதைகளைத் தொகுப்பாகக் கொண்டு "மிச்ச கதைகள்" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார் என்பது முக்கியமானது.
இந்த நிலையில் கி.ரா. கடந்த ஆண்டு தனது சுயநினைவுடன் எழுதிக் கொள்வதாக கூறி ஒரு எழுத்துப் படிவத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் தாம் எழுதிய படைப்புகள் அனைத்தின் உரிமையையும் தமது இரண்டு மகன்கள் மற்றும் அவரது வாசகரான சங்கர் என்கிற புதுவை இளவேனிலுக்கு எழுதி வைத்துள்ளார்.
இதன் மூலம் தமது படைப்புகள் அனைத்தும் இந்த மூவரையும் சாரும் எனத் தன் வாசகர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மூவரும் தமது படைப்புகள் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை "கரிசல் அறக்கட்டளை" என துவங்கி எழுத்தாளர்களுக்கும் சிறு பத்திரிகைகளுக்கும் தனது பெயரில் பணமுடிப்பும் கூடிய விருதினை வழங்க ஏற்பாடு செய்யும்படி கூறியிருக்கிறார் கி.ரா. இதன் மூலம் அவரின் தொலைநோக்கு பார்வை புலனாகும்.
திங்கள், 17 மே, 2021
தமிழ் எழுத்துருக்கள்
மூத்த மொழி
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி என்று போற்றப்படும் இனம் தமிழ் இனம். உலக மொழிகளில் மூத்தமொழி என்று அழைக்கப்படுவதும் நம் தமிழ் மொழி.
எழுத்து மொழி
ஒரு மொழியின் நிலைத்த பெருமைக்கும் வளர்ச்சிக்கும் காரணம் அம்மொழி எழுத்து மொழியாக நின்று நிலைபெற்று இருப்பதுவே. வெறும் பேச்சு மொழியாக இருக்கக்கூடிய மொழிகள் எவையும் நிலைத்து நிற்பதில்லை என்பதற்கு உலகில் உள்ள பல்வேறு இனத்தின் மொழிகள் சான்றாக அமைகின்றன. அவ்வகையில் தமிழ்மொழி இன்றளவும் செம்மாந்து நிற்பதற்குக் காரணம் அதன் எழுத்து மொழியே ஆகும் என்பதில் ஐயமில்லை.
தமிழ்மொழி எழுத்துக்கள்
தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் 12 மெய் எழுத்துக்கள் 18 உயிர்மெய் எழுத்துக்கள் 216 ஆய்தஎழுத்து 1 என மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. இது நாம் அறிந்ததே.
எழுத்துரு அல்லது வரிவடிவம்
தமிழ் எழுத்துக்கள் 247 இருப்பினும் அவற்றை எழுதக்கூடிய வரிவடிவங்களில் எண்ணற்ற வேறுபாடுகள் இருக்கின்றன. அத்தகைய எழுத்துக்களின் வரி வடிவங்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
உயிர் எழுத்துக்கள்
மெய் எழுத்துக்கள்
மெய் எழுத்துக்கள் மொத்தம் 18. ஆனால் அதன் எழுத்துருக்களோ மொத்தம் 36.
ஒவ்வொரு மெய்யெழுத்தும் இரண்டு எழுத்துருக்களைப் பெற்றிருக்கின்றன. அதாவது 'க' என்ற எழுத்தின் மேலே உள்ள புள்ளியையும் சேர்த்து மொத்தம் இரண்டு எழுத்துருக்கள் என்று கணக்கிடப்படுகின்றன.
அங்ஙனம் மெய் எழுத்துக்கள் மொத்தம் 36 எழுத்துருக்களைப் பெற்றிருக்கின்றன என்பது தெரிகிறது.
உயிர் மெய் எழுத்துக்கள்
உதாரணமாக,
உயிர்மெய் எழுத்துக்களின் வரிசையில், 'க' முதல் 'கௌ' வரையிலான எழுத்து வரிசையில் உள்ள 12 எழுத்துக்களில்,
'க' மற்றும் 'கு' தவிர, 'கை' வரை உள்ள எழுத்துக்கள் இரண்டு எழுத்துருக்களை பெற்றிருப்பதைக் காணலாம். 'கொ', 'கோ', 'கௌ' ஆகிய எழுத்துக்கள் 3 எழுத்துருக்களைப் பெற்றிருப்பதை காணலாம்.
இங்ஙனம் 'க' முதல் 'கௌ' வரையிலான எழுத்து வரிசையில் மொத்தம் 25 எழுத்துருக்கள் உள்ளன.
இது போன்றே ட, ர, ழ, ள, ஆகிய எழுத்துக்களும் 25 எழுத்துருக்களை பெற்றிருக்கின்றன.
மேலும், மேற்கண்ட எழுத்துக்களைத் தவிர்த்த மற்ற எழுத்துக்கள் அனைத்தும் அவ்அவ் வரிசையில் மொத்தம் தலா 27 எழுத்துருக்களைப் பெற்றிருக்கின்றன. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் மேற்கண்ட க, ட, ர, ழ, ள ஆகிய எழுத்துக்களில் உகரம் ஓர் எழுத்துருவை மட்டுமே பெற்றுவரும். ஆனால் மற்ற எழுத்துக்கள் அனைத்திலும் உகரமும் 2 எழுத்துருக்களைப் பெற்று வரும்.
அவ்வகையில், உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் 476 எழுத்துருக்களைப் பெற்றுள்ளன என்பது புலனாகிறது.
இவ்வாறு தமிழ் எழுத்துக்களில் உயிர் எழுத்து 16 மெய்யெழுத்து 36 உயிர்மெய் எழுத்து 476 ஆயுதம் 1 என மொத்தம் 529 எழுத்துருக்களைப் பெற்று அமைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிறு, 16 மே, 2021
இறைவா
உலகம் என்னவென்று புரியவில்லை
வாழ்க்கையின் அர்த்தம் தெரியவில்லை
கண்கள் இருந்தும் பயனில்லை
குருடாய் வாழவும் வழியில்லை
வாழ்க்கைப் படகும் மிதந்திடவே
வீசிய புயலால் கவிழ்ந்திடவே
வீழ்ந்தவர் எல்லாம் பிழைத்திடவே
துடுப்பென வருவாய் உதவிடவே!
– அதிதி ரேவதி
சனி, 15 மே, 2021
நீக்கமற நிறைந்த முருகன்
24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி...
-
தமிழ் மொழி எழுத்துக்களின் வரிவடிவங்கள் குறித்து சென்ற கட்டுரையில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக..., தமிழ் எழுத்துருக்களை குறில் நெடில் என இர...
-
"மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே கன்னல் கன்னல் மொழி ...
-
மூத்த மொழி கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி என்று போற்றப்படும் இனம் தமிழ் இனம். உலக மொழிகளில் மூத்தமொழி என்று அழைக்கப்படு...





























