செவ்வாய், 18 மே, 2021

கதை சொல்லி கி.ரா

 


கி. ரா எனும் கி.ராஜநாராயணன் (செப்டம்பர் 16, 1923 – மே 17, 2021)

தமிழ் எழுத்துலகில் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர் கி.ரா. இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

முழுப்பெயர்

கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர் என்பதாகும்.

பெற்றோர்

இவரின் தந்தை ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம் ஆவார். தாய் லட்சுமி அம்மாள் ஆவார். இத் தம்பதியருக்கு ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார்.

முதல் கதை

1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டும் கண்ணாடியாக வெளிப்பட ஆரம்பித்தது.

கி.ரா.தன்னைப்பற்றிக் கூறுகையில்,



கி.ரா. தான் இயல்பில் ஒரு விவசாயி என்றும்; ஒரு தேர்ந்த கதை சொல்லியாக விளங்கிய இவர்,  ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறுகிறார்.

பணி

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர் கி.ரா. நல்ல இசை ஞானம் கொண்டவர் ஆவார்.

அகராதிப்பணி

கரிசல் வட்டார மக்களின் பேச்சு மொழிச் சொற்கள் அனைத்தையும் ஒருங்கு திரட்டி, கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடியும் இவரே ஆவார்.

பெற்ற விருதுகள்

🌷சாகித்ய அகாடமி விருது🌷இலக்கிய சிந்தனை விருது🌷தமிழக அரசின் விருது🌷கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது🌷2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது. இவ்வாறு பல விருதுகளைப் பெற்றுள்ளார் கி.ரா.

படைப்புகள்

சிறுகதைகள் 

கன்னிமை, மின்னல், கோமதி, நிலை நிறுத்தல், கதவு(1965), பேதை, ஜீவன், நெருப்பு (புதினம்), விளைவு, பாரதமாதா, கண்ணீர், வேட்டி, கரிசல்கதைகள், கி.ரா-பக்கங்கள், கிராமிய விளையாட்டுகள், கிராமியக்கதைகள், குழந்தைப்பருவக் கதைகள், கொத்தைபருத்தி, புதுவை வட்டார நாட்டுப்புறக்கதைகள், பெண்கதைகள், பெண்மணம், வயது வந்தவர்களுக்கு மட்டும், கதை சொல்லி (2017)

குறுநாவல் 

கிடை, பிஞ்சுகள்

நாவல் 

கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாடமி விருது பெற்றது), அந்தமான் நாயக்கர்

கட்டுரை 

ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?, புதுமைப்பித்தன், மாமலை ஜீவா, இசை மகா சமுத்திரம், அழிந்து போன  நந்தவனங்கள், கரிசல் காட்டுக் கடுதாசி

தொகுதி 

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்

திரைப்படமாக ஆக்கப்பட்ட இவர் எழுத்துக்கள் 

ஒருத்தி 

(கிடை என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு அம்சன் குமார் இயக்கிய திரைப்படம்)

சகாப்த நிறைவு

2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 97ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

கடைசிப் பதிவும் எழுத்தும்

கடந்த ஆண்டு கொரோனா‌ நோய் தொற்று சூழலில், பெண்களைப் பற்றிய "அண்டரண்டப்பட்சி" என புத்தகத்தை தன் கைப்பட எழுதியுள்ளார். இதை அச்சில் பதிக்காமல், கைப்பிரதியாகவே வாசகர்கள் படிக்க வேண்டும் என விரும்பி எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சாதி குறித்த "சாவஞ்செத்த சாதிகள்" என்று கதையினையும், தான் எழுதாமல் விட்ட கதைகளைத் தொகுப்பாகக் கொண்டு "மிச்ச கதைகள்" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார் என்பது முக்கியமானது.


இந்த நிலையில் கி.ரா. கடந்த ஆண்டு தனது சுயநினைவுடன் எழுதிக் கொள்வதாக கூறி ஒரு எழுத்துப் படிவத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் தாம் எழுதிய படைப்புகள் அனைத்தின் உரிமையையும் தமது இரண்டு மகன்கள் மற்றும் அவரது வாசகரான சங்கர் என்கிற புதுவை இளவேனிலுக்கு எழுதி வைத்துள்ளார்.

இதன் மூலம் தமது படைப்புகள் அனைத்தும் இந்த மூவரையும் சாரும் எனத் தன் வாசகர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மூவரும் தமது படைப்புகள் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை "கரிசல் அறக்கட்டளை" என துவங்கி எழுத்தாளர்களுக்கும் சிறு பத்திரிகைகளுக்கும் தனது பெயரில் பணமுடிப்பும் கூடிய விருதினை வழங்க ஏற்பாடு செய்யும்படி கூறியிருக்கிறார் கி.ரா. இதன் மூலம் அவரின் தொலைநோக்கு பார்வை புலனாகும்.

[1]

[2]

[3]

சான்றாதாரங்கள்: [1,2,3] —Tamil.news.com






5 கருத்துகள்:

அழகுராஜ் ராமமூர்த்தி சொன்னது…

கரிசல் வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர் சாய்ந்து விட்டதைக் கண்ட கரிசல் கதைகள் கண்ணீர் வடிக்கின்றன.. சிறப்பான தொகுப்பு அம்மா..

Unknown சொன்னது…

கி.ரா ஐயாவைப் பற்றி படித்திருக்கிறேன். இருந்தாலும் இவரைப் பற்றி தெள்ளத் தெளிவாகவும்.சிறப்பாக கூறியமைக்கு நன்றி அம்மா 🙏

நறுமுகை சொன்னது…

மகிழ்ச்சி. நன்றி

Unknown சொன்னது…

கதை புரிந்துக் கொண்டது

நறுமுகை சொன்னது…

மகிழ்ச்சி

நீக்கமற நிறைந்த முருகன்

24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி...