திங்கள், 24 மே, 2021

திருவள்ளுவர் யார்?

திருவள்ளுவர் யார்? எனும் கேள்வியே இன்று தலைப்பாகி நிற்கிறது. காரணம் வள்ளுவர் இயற்றிய குறளில் சமண சமயக் கொள்கைகளும், தத்துவங்களும் ததும்பக் காணலாம்.  ஆயினும் திருக்குறள் சமணசமய நூல் என்று  உறுதியாகக் குறிப்பிடப்படவில்லை. ஏன்? 

அதேபோல் வள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்றும் தீர்க்கமாகக் குறிப்பிடப்படவில்லை. மாறாக சைவர்கள் திருவள்ளுவ நாயனார் என்று கூறி வள்ளுவரைச் சைவர் என்று குறிப்பிடுகின்றனர். இதை ஏற்கலாமா?

மேற்கண்ட வினாக்களுக்கு விடை காண விரும்பியே இம்முயற்சி..

சமணசமயக் கொள்கைகள் உணர்த்துவது என்ன?

(சமணசமயக் கொள்கைகளில் முதலில் துறவற ஒழுக்கங்கள் குறித்து காண்போம்.)



துறவற ஒழுக்கங்கள்

சமணர்கள் தங்கள் வாழ்வை இல்லறம் துறவறம் என்று இரண்டாக வகுக்கின்றனர்.  அதில் துறவற ஒழுக்கங்கள் மொத்தம் 28 ஆகும். அவை 1. மா விரதங்கள் ஐந்து  2. சமிதி ஐந்து 3. ஐம்பொறி அடக்கம் ஐந்து 4. ஆவஸ்யகம் ஆறு 5. லோசம், திகம்பரம்,  நீராடாமை, பல் தேய்க்காமை, தரையில் படுத்தல், நின்று உண்ணல், ஒருவேளை உண்ணல் என மொத்தம் 28 ஒழுக்கங்கள் துறவறத்திற்கு உரியது என்று சமண சமயம் வகுத்துள்ளது.

1. மாவிரதங்கள் என்பன அகிம்சை, வாய்மை, கள்ளாமை, துறவு, அவா அறுத்தல் என்பனவாகும். (5)

2. சமிதிகள் என்பன இரியை, பாஷை, ஏஷாணை, ஆதான நிக்ஷேபனை, உத்சர்க்கம் என்பனவாகும். (5)

3. ஐம்பொறி அடக்கம் என்பன மெய் வாய் கண் காது மூக்கு ஆகியனவாகும். (5)

4. ஆவஸ்யகம் என்பன சமாயிகம், துதி, வணக்கம், பிரதிகிர்மணம், கழுவாய், விசர்க்கம் என்பனவாகும். (6) இவற்றுடன் லோசம், திகம்பரம்,  நீராடாமை, பல் தேய்க்காமை, தரையில் படுத்தல், நின்று உண்ணல், ஒருவேளை உண்ணல் (7) சேர்த்து மொத்தம் 28 ஒழுக்கங்கள் ஆகும்.

விளக்கமாகக் காண்போம்..

1. அகிம்சை

சமணர்கள் துறவறம் மேற்கொள்ள இருப்பார்களே ஆனால் அவர்கள் பின்பற்றக்கூடிய 28 ஒழுக்கங்களில் முதலாவதாக கருதப்படுவது அகிம்சை என்னும் ஒழுக்கமாகும். 

இந்த அகிம்சை என்னும் முதல் ஒழுக்கத்தில் சமணர்கள் பின்பற்றக்கூடிய கூறுகள் என்னென்ன தெரியுமா?

இன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய நான்கும் சேர்ந்ததே அகிம்சை என்று கூறுகின்றது சமண சமய ஒழுக்கம்.

 அதாவது சமணர்கள் துறவறம் மேற் கொள்ளப்படும் பொழுது பிற உயிர்களுக்கு துன்பம் செய்யக்கூடாது. பிற உயிர்களிடத்து அருளுடைமை கொண்டவராக அதாவது கருணை உள்ளம் கொண்டவராக விளங்க வேண்டும். பிற உயிர்களைக் கொல்லக்கூடாது. அதுபோல அவர்கள் புலால் உணவு உண்ணக்கூடாது. இந்த நான்கும் சேர்ந்தது தான் அகிம்சை என்ற ஒரு ஒழுக்கத்தை குறிக்கின்றது.

இங்கே உங்களுக்கு ஓர் ஐயம் நிச்சயமாக ஏற்படும். அது என்ன? 

இந்த ஒழுக்கக் கூறுகள் அனைத்தும் திருக்குறளில் அதிகாரங்களாகக் காணப்படுகின்றன என்பது தான். திருவள்ளுவர் தன்னுடைய அதிகாரங்களுக்கு வைத்த பெயர்கள் அனைத்தும் இங்கே சமண சமயத்தவர் துறவறம் மேற்கொள்ளப்படும் பொழுது பின்பற்றக்கூடிய ஒழுக்கக் கூறுகளாக அமைகின்றன என்பது மிகப் பொருத்தமான சான்றாக அமைகின்றது.

2. வாய்மை

வாய்மை என்னும் இரண்டாவது ஒழுக்கத்திற்கு இளம்பூரணர் ஒரு விளக்கம் தருகிறார். அது என்னவென்றால், பொய்யாமையானது தீமை பயக்கும் சொற்களைக் கூறாமை என்று கூறுகிறார். 

அதாவது ஒருவர் ஒரு உயிரைக் கொல்ல துணிவாராயின் அவ்வமயம் பொய் சொல்லியாகிலும் கொலையிலிருந்து அவ்உயிரைக் காப்பாற்ற வேண்டியது சமணரின் கடமையாகும் என்று சமண சமய ஒழுக்கம் உரைக்கின்றது. 

இங்கும் உங்களுக்கு ஓர் உண்மை புலப்படும். "பொய்மையும் வாய்மை இடத்து" எப்போது?  "புரைதீர்ந்த  நன்மை பயக்கும் எனின்" என்று வள்ளுவர் வாய்மைக்கு வகுத்த எல்லையை உணர்த்தும் குறள் உங்களுக்கு கண்முன்னே காட்சி அளிக்கும்.

3. கள்ளாமை 

இங்கே கள்ளாமை என்பது களவு என்று பொருள் உணர்த்துகிறது. 

எவ்வளவு அற்பமான பொருளாக இருந்தாலும் அதனை அதற்குரியவர் கொடுத்தால் அன்றி, எடுத்துக் கொள்ள நினையாது இருத்தல் ஆகும் என்று விளக்கம் தருகிறது சமண சமய ஒழுக்கம்.

இவ்ஒழுக்கமும் துறவறவியலில் வள்ளுவர் 29வது அதிகாரமாக படைத்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. சான்றாக: 

"களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்" — 283.

4. துறவு

துறவு என்பது சிற்றின்பத்தை மனம் வாக்கு காயங்களால் செய்யாதிருத்தல் என்று கூறுகின்றது சமண சமயம் ஒழுக்கம். அதாவது தெய்வங்களுடனாவது,  மனிதர்களுட -னாவது, விலங்குகளுடனாவது இணை விழைச்சாகிய சிற்றின்பத்தைத் துய்க்க மாட்டேன் என்றும்; இதனை மனம், மொழி, மெய்களால் முக்காலத்திலும் செய்யாதிருத்தல் அவசியம் என்றும் கூறுகின்றது சமண சமயம் ஒழுக்கம்.

இத்துறவு குறித்தும் வள்ளுவர் துறவறவியலில் 35வது அதிகாரமாகப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. அவா அறுத்தல்

அவா அறுத்தல் என்பதற்கு முற்றத் துறத்தல் என்று பொருள். அதாவது தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல் என்று இளம்பூரணர் பொருள் உரைக்கின்றார். 

இதனை வள்ளுவர் துறவறவியலில் 37வது அதிகாரமாக வகுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

6. இரியை 

இரியை என்றால் இரியாசமிதி என்று பொருள்படும். அதாவது சமணத் துறவி நடக்கும் போது தரையை மூன்று முழ தூரம் முன்னால் பார்த்து புழு பூச்சிகள் இருந்தால் அவற்றை மிதிக்காமல் நடத்தல் வேண்டும் என்று உணர்த்துகின்றது. 

அதனால்தான் சமணத்துறவிகள் மயிற்பீலி குஞ்சத்தை எப்பொழுதும் தங்கள் கையில் வைத்துக்கொண்டு விசிறியபடி நடப்பர் என்று குறிப்பிடுகின்றனர். 

"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சாலை மிகுத்து பெயின்" —  எனும் குறளில் வள்ளுவர் ஏன் மயிற்பீலியை சுட்டியுள்ளார் என்பது சிந்திக்கத்தக்கது. அவர் இவ்விடத்தில் ஒரு சிறு பறவையின் இறகைக் கூறி இருக்கலாம். ஆனால் மயிற்பீலியை இங்கே சுற்றுவதற்கு காரணம், அவர் ஒரு சமணர் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

7. பாஷாசமிதி

பாஷா சமிதி என்பதற்கு நாவடக்கம் அல்லது வாக்கடக்கம் என்று பொருள் உணர்த்துகின்றது.

நாவடக்கம் என்பதற்கு பழித்துப் பேசுதல், புகழ்ந்து பேசுதல், கோபமாக பேசுதல், கடுஞ்சொல் கூறல் முதலிய பேச்சுக்களை நீக்கி இனிமையாகப் பேசுவதையும் தர்மஒழுக்கம் சமயக்கொள்கை இவற்றை போதிப்பதையும் சமணத்துறவி தன் கொள்கையாக போற்றுவதே பாஷா சமிதி என்கின்றது சமணசமய ஒழுக்கம்.

அடக்கம் பற்றி வள்ளுவனும் நாவடக்கம், அவையடக்கம், புலனடக்கம் என்பனவாக பகர்ந்துள்ளான் என்பது குறிப்பிடத் -தக்கது.

8. ஏஷணாசமிதி

ஏஷணாசமிதி என்பது உண்ணும் உணவில் 46 வகை குற்றங்கள் இல்லாத உணவினை யாசித்துப் பெற்று அளவாக உண்ணுதல் ஆகும் என்று சமணசமய ஒழுக்கம் கூறுகின்றது. [46 வகை குற்றங்களை சமண சமய நூலில் காண்க.]

இதற்கும் வள்ளுவர் நட்பியலில் 95வது அதிகாரத்தில் 942, 943, 944, 945 ஆகிய குறட்பாக்களில் ஒரு மனிதன் எப்படி உண்ண வேண்டும், எந்த அளவு உண்ண வேண்டும், என்ன மாதிரியான உணவுகளை உண்ணவேண்டும் என்று விளக்கியுள்ளார்.

9. ஆதான நிக்ஷேபனாசமிதி

துறவறம் மேற்கொள்ளும் சமணர்கள் தங்கள் நூல் (புத்தகம்), குஞ்சம் (மயிற்பீலி), கமண்டலம் போன்றவற்றை மெதுவாக எடுத்து வைக்க வேண்டும் என்று கூறுகின்றது. அதாவது பிற சிறு உயிர்களைக் கூடத் துன்புறுத்தக் கூடாது என்பது கருத்தாகிறது.

10. உத்சர்க்க சமிதி

துறவறம் மேற்கொள்ளும் சமணர்கள் மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ஊருக்கு வெளியே யாரும் அண்டாத இடத்தில் கழிக்க வேண்டும். அதனால் கூட பிற உயிர்களுக்குத் துன்பம் நேரக் கூடாது என்கிறது சமணசமய ஒழுக்கம்.

11. ஐம்பொறியடக்கம்

ஐம்பொறியடக்கம் என்பது 11. மெய், 12. வாய், 13. கண், 14. காது, 15. மூக்கு ஆகிய ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டும் என்று உணர்த்துகின்றது. இதனையும் வள்ளுவர் அடக்கமுடைமை அதிகாரத்தில் புலனடக்கமாக உணர்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

16. சமாயிகம் 

சமாயிகம் என்றால் சமமாகப் பார்த்தல் என்பது பொருள். வள்ளுவனும் இதனை நடுவுநிலைமை என்னும் அதிகாரத்தில் உரைத்துள்ளான் என்பது நினைவு கூறத்தக்கது.

17. துதி

துறவு மேற்கொள்ளும் சமணர்கள் 24 தீர்த்தங்கரர்களையும் அருகனையும் மனத்தால் துதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

இதனை வள்ளுவர் கடவுள் வாழ்த்து என்னும் முதல் அதிகாரமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

18. வணக்கம்

துறவறம் மேற்கொள்ளும் சமணர்கள் இறைவன், சித்தர், தீர்த்தங்கரர், பெரியோர்கள் ஆகியோரை வாக்காலும் உடலாலும் வணங்குதல் வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றது. 

19. பிரதிகிர்மணம்

சமணர்கள் துறவறம் மேற்கொள்ளும் பொழுது பாவத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்ளல் அதாவது பாவச் செயல்கள் எதுவும் செய்யாது தற்காத்தல் என்பதை குறிப்பிடும் விதமாக அமைகின்றது. 

இதனை வள்ளுவனும் 

"பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவன் அடி சேராதார்" என்று குறிப்பிட்டிருப்பார்.

20. கழுவாய்

சமணத்துறவிகள் தன் கொள்கைப் பிடியில் தவறிழைத்தால் வருந்தி குற்றத்தை எண்ணித் திருந்துதல் வேண்டும். கழுவுதல் என்றால் திருந்துதல் என்று பொருள்.

21. விசர்க்கம்

தவம் செய்யும்பது வரும் துன்பங்களை எண்ணி அஞ்சாமல் பொறுமை காத்தல் வேண்டும். உடலின் மீது பற்று அறுக்கும் நிலைமைக்கு விசர்க்கம் என்று பெயர்.

இங்ஙனம் பொறுமையாக இருப்பதை வள்ளுவர் பொறையுடைமை அதிகாரத்தில் வகுத்துள்ளார்.

22. லோசம் என்றால் மயிர் களைதல்

23. திவாகரம் என்றால் நிர்வாணமாக இருத்தல்.

24. நீராடாமை என்றால் உடலின் மீது பற்று விட்ட பின் அதனை அழகுபடுத்தும் எண்ணத்தையும் நினைவாய்.

25. தரையிற் படுத்தல் என்றால் உடலின் மீது பற்று அற்று விட்ட பின் அந்த உடலின் மீது ஏதேனும் குத்திவிடுமோ என்ற கவலையும் இன்றி தரையில் படுத்தல் ஆகும்.

26. பல் தேய்க்காமை என்றால் உடம்பையும் துறந்த பின் பற்களைத் தேய்த்து சுத்தம் செய்யும் எண்ணத்தை நினையார்.

27. ஏகபுக்தம் என்றால் துறவறம் மேற் கொள்ளும் சமணர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும் என்ற கொள்கையை கடைப்பிடித்தல் ஆகும்.

28. நின்று உண்ணல் என்பது உணவினை நின்றுகொண்டு உண்பதைக் குறிக்கும்.

இந்த 28 ஒழுக்கங்களைச் சரிவர கடைப்பிடிப்பவர்கள் தான் துறவறம் மேற்கொள்ளும் சமணத் துறவியாக ஏற்றுக்கொள்ளப்படுவர். அல்லது துறவறம் மேற்கொள்ளும் சமணத்துறவிகள் கண்டிப்பாக இந்த 28 ஒழுக்கங்களையும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதை சமணர்கள் மிகவும் வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட சமணசமய ஒழுக்கங்களில் பெரும்பாலானவை கிட்டத்தட்ட 99 சதவீத கொள்கைகள் அனைத்துமே வள்ளுவரால் திருக்குறளில் பின்பற்றப்பட்டுள்ளது என்பதை நாம் கண்கூடாகக் காண முடிகின்றது. 

மேலும் திருவள்ளுவர் இல்லறம் போற்றியவர் என்பதும் நாம் அறிந்ததே. செவி வழிக் கதையாக வள்ளுவன் வாசுகியின் இல்லற வாழ்க்கையை கேட்டறிந்துள்ளோம். சமண சமயத்தவர்களில் இல்லறம் போற்றுவோரும் உண்டு. துறவறம் போற்றுவோரும் உண்டு என்பது நாம் முதலிலேயே குறிப்பிட்டிருந்தோம். 

அவ்வகையில் வள்ளுவர் வாசுகி என்னும் தன் மனைவியுடன் இல்லற வாழ்வை மேற்கொண்டவர் என்பதும் நமக்கு இங்கே வள்ளுவர் சமணர் என்பதை உணர்த்தாமல் உணர்த்துகின்றது.

அதுமட்டுமல்லாது வள்ளுவருக்கு ஓவியம் தீட்ட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் முதன்முறையாக பாரதிதாசன் அந்த முயற்சியை மேற்கொள்கின்றார். பாரதிதாசனுக்கு உறுதுணையாக திராவிட கழகத்தைச் சேர்ந்த இராம செல்வன் என்பவரும் உடன் இருக்கின்றார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஓவியர் வேணுகோபால் சர்மாவை அணுகுகின்றனர் வேணுகோபால் சர்மாவும் திருவள்ளுவர் திருவுருவத்தை வரைந்து முடிக்க, அதனை அறிஞர் அண்ணா 1960இல் காங்கிரஸ் மைதானத்தில் அறிமுகப்படுத்தினார் என்பது இன்றியமையாதது. திருவள்ளுவரின் ஓவியத்தில் அவருடைய ஆடை வெண்ணிற ஆடையாக வரையக் காரணம்,  சமணர்கள் வெண்ணிற ஆடை உடுத்துபவர்கள் என்பதே ஆகும். 



மேலும் திருவள்ளுவர் மயிலாப்பூரில் வசித்தார் என்ற கருத்தையும் உற்று நோக்கல் அவசியமாகும். ஏனென்றால் மயிலாப்பூரில் இன்றளவும் சமணர்கள் வாழ்ந்து வரும் பகுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட இத்தனை சான்றுகளும், காரணங்களும் திருவள்ளுவர் ஒரு சமணர் என்பதை 100 சதவிகிதம் நமக்கு புலப்படுத்துகின்றது. ஆயினும் இன்னும் திருவள்ளுவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர் என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாத ஒன்றாக, ஆய்வுப் பொருளாக மட்டுமே இருப்பதென்பது வருத்தமளிப்பதாகவே உள்ளது.

இன்னும் தொடரும்...









2 கருத்துகள்:

Unknown சொன்னது…

தெரியாத கருத்துகளை மிக எளிய முறையில் சொல்லியது மிக அருமை அம்மா 👌👌👌👌👌

அழகுராஜ் ராமமூர்த்தி சொன்னது…

சிறப்பு மா..

நீக்கமற நிறைந்த முருகன்

24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி...