வெள்ளி, 21 மே, 2021

கும்மி குளிரச் செய்த மாதரசி

[கும்மி என்றால் வயிறு என்று பொருள்]

சென்ற பதிவின் தொடர்ச்சி..

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தாண்டவம் ஆடிய தாது பஞ்சத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை முன்னர்க் கண்டோம். ஆனால் மதுரை நகரைப் பொறுத்த மட்டில் பசிப்பிணியைப் போக்க வந்தாள் ஒரு மணிமேகலை. அவள் "குஞ்சரம்' என்ற பெயர்கொண்டு விளங்கினார். 

அழகே உருவவானவள் குஞ்சரம்

குஞ்சரம் தேவரடியார் வழிவந்த பெண் என்று வரலாறு கூறுகிறது. அவள் அழகே உருவான மங்கை என்று சொல்லி தெரிய அவசியம் இல்லை. புகைப்படமே அதற்கு சாட்சி. உடல் முழுக்க தங்கம் பவளம் வைரம் முத்து நகைகள் அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்குமாம். 


ஆயிரம் கண்கள்

குஞ்சரம் கோயிலுக்கு செல்லும்போது அவள் நடை, உடை, நகை, கூந்தல் அழகினைக் காண ரசிக்க ஆயிரம் கண்கள் காத்திருக்குமாம். 

குஞ்சரத்தின் சொத்துக்கள்

மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் இரண்டு மாளிகைகள் குஞ்சரத்திற்குச் சொந்தமாக இருந்தது. அவர், தேவரடியார் ஆனதால் ஆடலும் பாடலும் எப்போதும் அந்த மாளிகைகளில் ஆட்சி செய்யும் என்று கூறப்படுகிறது. எல்லா நாட்களும் விருந்து தடபுடல்தான். மாளிகைக்கு பெரும் செல்வந்தர்களின் வருகை குஞ்சரத்தின் முக்கியத்துவத்தையும் பிரபலத்தையும், குவியும் செல்வத்தையும் சுட்டிக் காட்டும் வகையில் அமைந்தன.

குஞ்சரத்தின் தாயுள்ளம்

குஞ்சரம் கோயில் வேலைகளை செய்து வந்ததினால் பஞ்சம் பற்றி இம்மி அளவு கூட கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால் "சாதாரண மக்கள் பஞ்சத்தினால் ஒன்றும் கிடைக்காமல் ஒட்டி உலர்ந்து ஒருவர் சாவதை ஒருவர் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் நீ சாவதை நான் பார்க்கணுமா.. இல்லை நான் சாவதை நீ பார்க்கிறாயா' என்று  கணவன்- மனைவி, பெற்றோர் - பிள்ளைகள் பேச, கேட்கக் கூட சக்தியில்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்த நிலையிலேயே மடிந்து போகிறார்கள்' என்ற செய்தி குஞ்சரத்தின் செவிகளில் இடிபோல் இறங்கின. இறைவனுக்குத் தொண்டு செய்த உள்ளம் அல்லவா! அவளின் கடலலை போல் பொங்கிப் பிரவாகம் எடுத்தது.

பசிப்பிணி போக்கினாள்



பஞ்சத்தில் அடிபட்டு மக்கள் செத்து மடிவதிலிருந்து காக்க, பசியால் தவிப்பவர்களுக்கு ஒரு வேளை கஞ்சியாவது வழங்கத் தீர்மானித்தாள்.

பெரிய வட்டையில் (தேக்சா, டவரா என்று இன்று வழங்குகிறோம்) கஞ்சி காய்ச்சி வழங்க ஆரம்பித்தாள். சில நாட்கள் நகர்ந்தன. "குஞ்சரம் வடக்கு ஆவணி மூல வீதியில் பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு கஞ்சி வழங்குகிறாள்' என்ற செய்தி மதுரை சுற்றுவட்டாரத்தில் காட்டுத் தீயாகப் பரவியது. 

நடக்க வலுவில்லாதவர்கள் கூட உயிரைப் பிடித்துக் கொண்டு நகர்ந்து தவழ்ந்து வர ஆரம்பித்தனர். மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. ஒரு வட்டை கஞ்சி வழங்கி வந்த குஞ்சரம், இரண்டு வட்டை கஞ்சி காய்ச்சி வழங்கினார். சில நாட்களில் அது மூன்று வட்டையானது. அப்படி என்றால் தமிழகத்தில் எந்த அளவு பஞ்சம் பீடித்திருக்கக்கூடும். நீங்கள் முடிவுசெய்து கொள்ளுங்கள்.

திரும்பிப் பார்த்தனர்

இந்த கஞ்சி வழங்கல் செய்தியைக் கேட்ட மதுரை ஆட்சியரான ஜார்ஜ் பிராக்டர் ஆச்சரியப்பட்டுப் போனார். "ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை குஞ்சரம் செய்கிறாளே' என்று வியந்தார்.

"நாமும் ஏதாவது செய்ய வேண்டும்... இல்லையென்றால் நம்மை இழிவாகப் பேசுவார்கள்.. நாளைய சரித்திரத்திலும் பஞ்ச காலத்திலும் ஒன்றும் செய்யவில்லை என்று இகழ்ச்சியாகப் பதிவு செய்வார்கள்' என்று நினைத்து மூன்று கஞ்சித் தொட்டிகளை திறந்தார்.

ஆட்சியரின் கஞ்சி தொட்டிகளில் கஞ்சி குடித்தவர்களை மதுரையிலிருந்து பல ஊர்களுக்கும் செல்ல ரயில்பாதை அமைக்கும் வேலைகளில் ஈடுபடுத்தினார். அரசாங்க கஞ்சித் தொட்டிகள் வந்ததினால் குஞ்சரம் வழங்கும் கஞ்சியை வாங்க வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்தாலும் மொத்தமாக நின்றுவிடவில்லை. 

கோபுரகலசம் குடிசையில்

நாட்கள் நகர நகர கஞ்சி காய்ச்ச பணம் இல்லாது வந்த போது உச்சி முதல் பாதம் வரை அணிந்திருந்த நகைகளை விற்று கஞ்சி ஊற்றினாள் குஞ்சம்.  இடையிடையே சமையல்காரர்கள் வராமல் இருந்துவிடுவார்களாம். குஞ்சரம் சிரமம் பார்க்காமல் அவரே கஞ்சி காய்ச்சுவாரம். பஞ்சம் தொடர்ந்ததால் கஞ்சி வழங்குவதைத் தொடர, ஓட்டு வீட்டிற்கு மாறி, தனது இரண்டு மாளிகைகளையும் விற்றார். அந்தப் பணத்தில் இடைவெளி விடாமல் பதிமூன்று மாதங்கள் கஞ்சி வழங்கி வந்தார். இப்படி ஒரு ஆண்டு முழுவதும் கஞ்சி சலிக்காமல் ஊற்றி வந்த குஞ்சரம் நோய் வந்து இறந்தார் என்று மதுரை வரலாறு நம் கண்களை விரிவடையச் செய்து வியப்பில் ஆழ்த்திச் செல்கிறது.

உப்பிட்டவரை

"உப்பிட்டவரை உள்ளளவும் நினை" என்பார்களே, குஞ்சரத்தின் இறுதிச் சடங்கில் அவர் ஊற்றிய கஞ்சி குடித்ததனால் உயிர் பிழைத்த அனைவரும் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினார்களாம். அஞ்சலி செலுத்த வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்துவிட்டு அன்றைய வெள்ளைக்கார ஆட்சியர் ஜார்ஜ் பிராக்டர் "கோயில் திருவிழாவுக்குத்தான் மதுரையில் இப்படி மக்கள் கூடுவார்கள். பெண் ஒருவர் இறந்ததற்கு மக்கள் இப்படி கூடியதை முதல் முறையாக பார்க்கிறேன்..' என்று பதிவு செய்தாராம்..! என்று வரலாறு கூறுகிறது.

அந்த நிலை இந்த 2021இல் மீண்டும் வந்து விடக் கூடாது என்று அனைவரும் கைதொழுவோம். 🙏

கொரோனாவை ஒழிக்க முகக் கவசம் அணிவோம்! தனிநபர் இடைவெளி கடைப்பிடிப்போம்! தேவையின்றி வெளியே சுற்றுவதைத் தவிர்ப்போம்! 

6 கருத்துகள்:

sharumathi சொன்னது…

நல்ல பதிவு .

நறுமுகை சொன்னது…

நன்றி

Unknown சொன்னது…

மிகவும் அருமை... நாம் அனைவருக்காகவும் பிராத்தனை செய்வோம் 🙏

நறுமுகை சொன்னது…

நன்றி. மகிழ்ச்சி

Meena சொன்னது…

அருமையான தகவல் அம்மா 👌👌👌

நறுமுகை சொன்னது…

நன்றி

நீக்கமற நிறைந்த முருகன்

24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி...