வியாழன், 20 மே, 2021

தமிழகமும் தாது வருடப் பஞ்சமும்


பஞ்சகாலம்

தமிழகத்தில் பல்வேறு பஞ்சங்கள் தோன்றியுள்ளன. அவற்றில் முக்கியமானது 1876ஆம் ஆண்டின் தாது வருடப் பஞ்சம். இன்னொரு பஞ்சம் 1896ல் தமிழகத்தைத் தாக்கியது. இந்த பஞ்சங்களுக்கு முக்கிய காரணம் ஆங்கிலேயர்களின் அடக்குமுறை கொண்ட ஆட்சி முறையே என்று வரலாறு கூறுகிறது.

கிழக்கிந்தியக் கம்பெனிதான் சென்னை நகரை உருவாக்கியதென்பது நாம் அறிந்ததே. அதன் ஆட்சியில் 1640 ல் துவங்கி 1907 வரை சுமார் 17 முறை அன்றைய சென்னை மாகாணத்தை உணவுப் பஞ்சங்கள் தாக்கினவாம். 

தமிழகத்தைத் தாக்கிய பஞ்சங்கள்

துவாதசப் பஞ்சம், தாதுப் பஞ்சம், குண்டூர்ப் பஞ்சம், ஒரிஸ்ஸா பஞ்சம் என்று பஞ்சங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை இந்த பஞ்சங்கள் காவு வாங்கின என்பதும் குறிப்பிடத்தக்கது.

பஞ்சம் ஏற்படக் காரணங்கள்

சிப்பாய்ப் புரட்சிக்குப் பின் சென்னை மாகாணம் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தது. கடுமையான நிலவரிவிதிப்பு, விளைந்த பயிர்களை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தல் என உணவு உற்பத்தி பிரிட்டிஷ் ஆட்சியால் நெருக்கடிக்கு உள்ளானது.

தக்காணப் பீடபூமிப் பகுதிகளான இன்றைய தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய பகுதிகளின் மக்கள் தாது வருஷப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டனர்.

வறட்சி ஏற்பட்டபோது மக்கள் விதை நெல்லைச் சமைத்துச் சாப்பிடும் நிலை ஏற்பட்டது. ஆயினும் கூட தானிய ஏற்றுமதியை ஆங்கிலேயர்கள் நிறுத்தவில்லை. கப்பல் கப்பலாக கோதுமையும் பருத்தியும் உணவுப் பொருட்களும் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

பஞ்சத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தானியங்களின் சிறு வணிகத்தை முற்றிலும் தடைசெய்து, ஏகபோக விற்பனை உரிமையைத் தனதாக்கிக்கொண்டது பிரிட்டிஷ் அரசு. வரி செலுத்த முடியாதவர்களின் ஆடு, மாடுகள் கூட பறிமுதல் செய்யப்பட்டன.

விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தத்தளித்தனர். விவசாயம் பொய்த்துப் போக, உள்ளூர் சந்தைகளில் தானியங்களின் வரத்து முற்றிலுமாக நின்று போனது.

பெருமுதலாளிகள் ஆங்கிலேயரின் உதவியுடன் வடமாகாணங்களில் இருந்து தொடர் வண்டிகளிலும், பர்மாவிலிருந்து கப்பல்களிலும் தானியங்களை கொண்டு வந்து இறக்கினர். ஆனால் அவற்றைக்கூடப் பதுக்கி கள்ளச்சந்தையில் மூன்று, நான்கு மடங்கு விலையில் விற்றுக் கொள்ளை அடித்தனர்.

மக்களின் அவலநிலை



பஞ்சகாலத்தில் மக்கள் வேலை வாய்ப்பினை முழுதாக இழந்தனர். வருமானமற்ற நிலையில் நகைகள், பாத்திரங்கள், ஆடு மாடுகள், துணிகள், வீட்டு கதவு, ஜன்னல்கள் என்று அனைத்தையும் விற்று உணவு உண்டனர். பணம் கரைந்ததும் நாடோடி வாழ்க்கை வாழும் நிலைக்கு பெரும்பாலான மக்கள் தள்ளப்பட்டனர்.

வேலை பெறுவதற்காக மக்கள் கிராமங்களைக் காலிசெய்து நடை பயணமாக பெரு நகரங்களை நோக்கிச் சென்றனர். கொடிய வெப்பத்தில் உணவும் நீரும் இன்றி நெடு நாட்கள் நடந்ததால் வயதானவர்களும், குழந்தைகளும் பாதி வழியிலே ஆங்காங்கே விழுந்து இறந்தனர்.

‘கீழே கிடந்த ஓர் எலும்புத்துண்டை நாய் கவ்விக்கொண்டு ஓடுவதை மக்கள் காண்கிறார்கள். உடனே அந்த நாயைத் துரத்தி கொன்று ஒரு துண்டு எலும்புக்காக அடித்துக்கொண்டார்கள்’ என்று அன்றைய நிலையைப் பதிவு செய்த ஓர் அறிக்கை கூறுகிறது.



மக்கள் எறும்பு புற்றுகளைத் தேடி அதிலிருந்து தானியங்களை எடுத்து உண்பதைக் கண்டதாக அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மெக்குகே கூறி இருக்கிறார்.

ஊர்வன, பறப்பன என அனைத்தையும் மக்கள் உண்ணத் துவங்கினர். வயிற்றைப் புண்ணாக்கி எரிச்சல் ஏற்படுத்தும் காட்டுக் கிழங்குகளைக் கூட விட்டு வைக்கவில்லை. பழக்க மில்லாத உணவினாலும், சில நச்சுள்ள காய், கொட்டை, கிழங்குகளை உண்டதாலும் பலர் நோயுற்று இறந்தனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமெனக் கருதப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட பட்டினிச் சாவுகள் மிகுந்தன என்று பஞ்ச நிவாரண குழு உறுப்பினர் வில்லியம் டிக்பி தனது ஃபேமைன் கேம்பைன்ஸ் இன் சவுத் இந்தியா என்ற நூலில் தெரிவித்துள்ளார்.

கொத்தடிமைகள் உருவாக்கம்

பசியால் மக்கள் எலும்பும் தோலுமாகி கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்தனர். எப்படியாவது உயிர் பிழைத்தாக வேண்டும் என்று நினைத்தவர்கள் இலங்கை, பிஜி, பர்மா, தென்னாப்பிரிக்கா என்று உலகின் பல்வேறு பகுதிகளுக்கு கொத்தடிமை முறையில் பிழைக்கப் போனார்கள்.

இப்பஞ்சம் தாக்கிய வருடங்களில் சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலங்கைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை மட்டும் 3லட்சத்துக்கும் அதிகம் என்கிறது புள்ளிவிவரம்.

பஞ்சத்தால் மாண்டவர்கள்

இந்தப் பஞ்சத்தில் மடிந்தவர்களின் எண்ணிக்கை பற்றி உறுதியான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. ஆயினும், இந்தப் பஞ்சம் பற்றி ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர், டேவிட் ஆர்னால்ட் கொடுக்கும் தகவல் படி இறந்தவர்களின் எண்ணிக்கை 35 லட்சம் பேர் என்று தெரிகிறது. 

அரசாங்கக் கணக்கின்படி பிரிட்டிஷ் மாகாணங்களில் மட்டும் 52 முதல் 55 லட்சம் பேர் மாண்டனர். ஆனால் மற்ற அறிஞர்களின் கணிப்புகள் இறந்தவர் எண்ணிக்கை இதைவிட மிக அதிகம் எனக் கூறுகின்றன. ரொனால்ட் சீவாய் 61 லட்சம் எனவும், அரூப் மகாரத்னா 82 லட்சம் எனவும், டிக்பி அதிகபட்சமாக ஒரு கோடியே மூன்று லட்சம் எனவும் மாண்டவர் எண்ணிக்கையைக் கணிக்கின்றனர்.

சாது மிரண்டால்

பசியால் வாடிய மக்களில் சிலர் வெள்ளைக்காரர்கள் மற்றும் செல்வந்தர்களின் தானியக்கிடங்குகளை சூறையாடி பகிர்ந்து கொண்டனர். சந்தைகளில் பூட்டியிருந்த கடைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. பசியின் கொடுமை தாளாமல் சிறுவர்களும் பெரியவர்களும் பல இடங்களில் வன்முறையுடன் கூடிய கொள்ளைகளில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது பல இடங்களில் ஆங்கிலேய அரசிற்கு பெரும் சிக்கலானது.

பஞ்சக்குழுமம் 

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இந்திய கவர்னர் ஜெனரல் லார்ட் லைட்டன் பிறப்பித்த உத்தரவின் பேரில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் பஞ்ச நிவாரண நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டன.

ஆங்காங்கே வேலைத் திட்டங்களை செயல்படுத்த முன்வந்தனர். பல இடங்களில் தண்டவாளம் அமைக்கும் பணிகளையும் சாலைகள் அமைக்கும் பணிகளையும் ஏற்படுத்தி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முயன்றனர். வேலை செய்தவர்களுக்குக் கூலியாக ஒரு வேளை உணவு மட்டுமே வழங்கப்பட்டது.

பஞ்சத்தின் எச்சங்களாய்..

இன்றும் சென்னையின் ஒரு சில இடங்கள் பஞ்சங்களை நினைவு கூறும் அடையாளங்களாகத் திகழ்வதைக் காணலாம். பக்கிங்ஹாம் கால்வாய் ஒரு முக்கிய அடையாளம். இந்த கால்வாய், தாது வருடப் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே வெட்டப்பட்டது.

பல ஆண்டுகள் இக்கால்வாய் போக்குவரவுக்குப் பயன்பட்டது. வீடுகளின் பெருக்கத்தாலும், தொழிற்சாலைகளாலும் இந்தக் கால்வாய் இன்று சாக்கடையாகச் சுருங்கி விட்டது என்பது வருந்தத்தக்கது.

சாப்பிட்டாச்சா? 

ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும்போது ‘சாப்பிட்டாச்சா’ என்று நாம் கேட்டுக்கொள் கிறோம் அல்லவா? இந்த வழக்கம் ஆரம்பித்தது பஞ்ச காலத்தில்தான் என்பது நினைவில் கொள்ளுங்கள். 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்...

1 கருத்து:

Meena சொன்னது…

அருமை அம்மா 👌👌

நீக்கமற நிறைந்த முருகன்

24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி...